ஆயிரக்கணக்கானோரின் கண்ணீருக்கு மத்தியில் குழந்தை சுர்ஜித்தின் உடல் மண்ணுடன் சங்கமம்

Report Print Sujitha Sri in இந்தியா

திருச்சி - நடுக்காட்டுப்பட்டி பகுதியில் ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்து இறந்த 2 வயது குழந்தை சுர்ஜித்தின் உடல் கல்லறைத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

பெருந்திரளான மக்கள் அப்பகுதியை சூழ்ந்துள்ளதாக தெரியவருகிறது.

முதலாம் இணைப்பு

திருச்சி - நடுக்காட்டுப்பட்டி பகுதியில் ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்து இறந்த 2 வயது குழந்தை சுர்ஜித்தின் பிரேத பரிசோதனை முடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆவராம்பட்டி பாத்திமா புதூர் கல்லறைக்கு சிறுவனின் உடல் கொண்டு செல்லப்பட்டு அங்கு இறுதிச்சடங்குகள் இடம்பெற்று வருகின்றன.

கடந்த 25ஆம் திகதி மாலை 5.30 மணியளவில் 2 வயது குழந்தை சுர்ஜித், ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்திருந்தார்.

ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்திருந்த சிறுவனை மீட்கும் முயற்சிகள் பல மணித்தியாலங்களாக தொடர்ந்திருந்தன.

என்ற போதும் சுர்ஜித்தை உயிருடன் மீட்கும் நடவடிக்கை தோல்வியை தழுவிய நிலையில், நீண்ட நேர போராட்டத்தின் பின் சுர்ஜித்தின் உடல் மீட்கப்பட்டது.

இரவு 10 மணியளவில், சுர்ஜித் சிக்கியிருந்த ஆழ்துளை கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அதிகாலை 2.30 மணியளவில் சுர்ஜித்தின் மரணம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதனையடுத்து, மீட்கப்பட்ட சுர்ஜித் உடலின் பிரேத பரிசோதனை மணப்பாறை அரச மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பின் ஆவராம்பட்டி பாத்திமா புதூர் கல்லறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

சிறுவன் சுர்ஜித்தின் மரணம் பல்வேறு தரப்பினரின் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், குழந்தையின் உடலுக்கு உறவினர்கள் மற்றும் பொது மக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.