நான்கு நாட்களாக துடிதுடித்து இறந்த சுர்ஜித்! நடந்தது என்ன..?

Report Print Jeslin Jeslin in இந்தியா

தமிழகத்தில், திருச்சி - மணப்பாறை பகுதியில் 2 வயதுடைய சுர்ஜித் என்ற சிறுவன் ஆழ்துளை கிணற்றிற்குள் விழுந்து நான்கு நாட்களாக மீட்கப்படாத நிலையில் உயிரிழந்தமை அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்நிலையில், குழந்தை சுர்ஜித்தை மீட்கும் போராட்டத்தில் கடைசி கட்டத்தில் நடந்தது என்ன? இன்று அதிகாலை சுர்ஜித் உடல் எப்படி மீட்கப்பட்டது என்று விவரங்கள் வெளியாகி உள்ளன.

ஆழ்துளை கிணற்றுக்குள் சிறுவன் சுர்ஜித் விழுந்த சம்பவம் அனைவரையும் பதை பதைக்க வைத்துள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த சுர்ஜித் கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தார்.

இந்த நிலையில் 4 நாட்களுக்கும் மேலாக சுர்ஜித்தை மீட்கும் பணி தீவிரமாக நடந்தது. இன்று அதிகாலை 4.30 மணிக்கு சுர்ஜித்தின் உடல் சடலமாக மீட்கப்பட்டது.

சுர்ஜித்தை மீட்க தீவிரமாக போராட்டம் நடந்து வந்த நிலையில் கடைசி நேரத்தில் ஆழ்துளை கிணறு வழியாகவே மீட்டு விடலாம் என்று மீட்பு படையினர் முடிவு எடுத்தனர். இதற்கு என்ன காரணம் என்று விவரம் வெளியாகியுள்ளது. அதேபோல் கடைசி கட்டத்தில் மீட்பு பணியின் போது என்ன நடந்தது என்ற விவரமும் தற்போது வெளியாகி இருக்கிறது.

அதன்படி நேற்று மாலை 5.30 மணிக்கு 60 அடி வரை பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது. அப்போதுதான் சுரங்கம் தோண்டும் பணி தீவிரம் எடுத்தது. ரிக் இயந்திரம் மற்றும் போர்வெல் இயந்திரம் கொண்டு மீட்பு பணிகள் செய்யப்பட்டது. நேற்று 7.30 மணி அளவில் 63 அடி வரை குழி தோண்டப்பட்டது.

அதன்பின் பாறை கிடையாது. வெறும் மணல் தரை மட்டுமே இருந்தது. இதனால் மீண்டும் ரிக் இயந்திரம் கொண்டு பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் சில அடி தூரம் சென்ற பின் மீண்டும் பாறைகள் தென்பட்டது. இதனால் தீயணைப்பு வீரர் அஜித்குமார் கீழே சென்று பார்த்தார்.

குழிக்குள் ஆக்சிஜன் சிலிண்டர் கட்டி உள்ளே இறங்கி எப்படி இருக்கிறது என்று பார்த்துவிட்டுவந்தார். இதையடுத்து எப்படியும் 35 அடி மேலும் தோண்ட வேண்டும் என்றால் ஒன்றரை நாள் ஆகும் என்று மீட்பு குழுவினர் தெரிவித்தனர். இதனால் உடனடியாக மருத்துவர்களிடம் மீட்பு குழு ஆலோசனை செய்தது.

சுர்ஜித்தை இப்போதே மீட்க வேண்டும். சுர்ஜித் பெரும்பாலும் இறந்திருக்க வாய்ப்புள்ளது. 60 அடிக்கு கீழே சுவாசிப்பது கடினம். அதனால் சுர்ஜித்தை ஆழ்துளை கிணறு வழியாகவே வெளியே கொண்டு வாருங்கள். அவர் பெரும்பாலும் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என்று மருத்துவர்கள் கூறினார்கள்.

மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி அதிகாலை 2.30இற்கு குழந்தை சுர்ஜித் உயிரிழந்துவிட்டதாக வருவாய் நிர்வாக ஆணையர் தகவல் அறிவித்தார். சுர்ஜித்தின் உடல் இருந்த குழியில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து அவர் இறந்ததாக உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சுர்ஜித் உடலை ஆழ்துளை கிணறு வழியாகவே மீட்டு எடுக்கும் பணிகள் நடந்தது.

இரண்டு மணி நேரப் போராட்டத்திற்கு பின்னர் தேசிய பேரிடர் மீட்பு படை மூலம் அதிகாலை 4:30 மணியளவில் குழந்தை சுர்ஜித்தின் உடல் சிதைந்த சிலையில் சடலமாக மீட்கப்பட்டது. 4 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற மிகப்பெரிய போராட்டம் பெரும் தோல்வியில் முடிந்தது. அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி சிறுவன் சுர்ஜித்தும் இந்த உலகை விட்டு விடைபெற்றுச் சென்றார்.

- One India