இந்திய விமான நிலையத்தில் கடத்தி செல்லப்பட்ட இலங்கையைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்கள்! நடந்தது என்ன?

Report Print Kanmani in இந்தியா

இலங்கையைச் சேர்ந்த இரண்டு கர்ப்பிணி பெண்கள் சென்னை விமான நிலையத்தில் வைத்து நேற்று இந்திய சுங்கத்துறை அதிகாரிகளினால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாத்திமா, திரேசா என்ற பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இரு பெண்களின் நடவடிக்கையில் சுங்கத்துறையினருக்கு எழுந்துள்ள சந்தேகத்தின் காரணமாக சுங்கத்துறையினை சேர்ந்த பெண் அதிகாரிகள் குறித்த பெண்களை சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது குறித்த இரு கர்ப்பிணி பெண்களின் வயிற்றினை ஸ்கேன் செய்து பார்த்த போது அவர்களது வயிற்றுக்குள் கரையாத கேப்ஸ்யூல் வடிவில் 1800 கிராம் எடை கொண்ட தங்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த பெண்களின் பாஸ்போர்ட் மற்றும் விசா போன்றவற்றை சுங்கத்துறையினர் பெற்றுக்கொண்டதுடன், பல்லாவரத்தில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு அழைத்து சென்று சோதனையினை மேற்கொண்டு வைத்தியசாலையை விட்டு வெளியே வந்தபோது, மோட்டார் வாகனத்தில் வந்த மர்மக் கும்பல் பாத்திமா, திரேசா ஆகிய இருவரையும் தங்கள் வாகனங்களில் ஏற்றி அழைத்துச்சென்றுள்ளனர்.

சுங்கத்துறை பெண் அதிகாரிகளோ தங்களை அந்த கும்பல் தாக்கி விட்டு இருவரையும் கடத்திச்சென்று விட்டதாகவும், வழக்குப் பதிவு செய்யாமல் விசாரித்து இருவரையும் மீட்டுக் கொடுக்கும்படியும் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் புதன்கிழமை காலையில் விமான நிலையம் சென்ற இரு பெண்களும், தங்களை கடத்திச்சென்ற கும்பல் வயிற்றில் இருந்த 1800 கிராம் எடை கொண்ட தங்க கேப்சூல்களை எடுத்துக் கொண்டு விரட்டி விட்டதாகவும், தங்களது பாஸ்போர்ட்டையும், விசாவையும் தந்தால் சொந்த நாட்டிற்கு சென்று விடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே இவர்கள் இருவரையும் கடத்திச்சென்றது எந்த கும்பல்? அழைத்து செல்ல அறிவுறுத்தியது யார்? கும்பலுக்கு விமான நிலையத்தில் இருந்து தகவல் அளித்தது யார் ? என்ற கேள்விகளுடன் சுங்கத்துறை அதிகாரிகள், உயர் அதிகாரிகள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை சுங்கத்துறையில் உள்ள அதிகாரிகள் தங்க கடத்தலுக்கு உடந்தையாக இருக்கும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளதால், இது குறித்த விரிவான விசாரணை மேற்கொண்டு அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.