சிறையில் ஐந்தாவது நாளாகவும் தொடரும் நளினியின் உண்ணாவிரத போராட்டம்

Report Print Kanmani in இந்தியா

வேலூர் பெண்கள் தனிச்சிறையில் உள்ள நளினியும், ஆண்கள் மத்திய சிறையில் உள்ள முருகனும் 5வது நாளாக இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்திய பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக முருகன், நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

இந்நிலையில், 7 பேர் விடுதலை முடிவில் ஆளுநர் மாளிகையின் பரோல் தாமதம் மற்றும் இன்னும் விடுதலை கிடைக்கப்பெறாமை என்பவற்றை கண்டித்து வேலூர் சிறையிலுள்ள நளினி சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளார்.

இது தொடர்பான கடிதமொன்றினையும் சிறைத்துறைக்கு நளினி அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனது விடுதலையில் தாமதம் மற்றும் சிகிச்சைக்காக சென்னை வரும் கணவர் முருகனின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள தந்தையை கவனித்துக் கொள்ள பரோல் கேட்டு அதிலும் தாமதம் என சில காரணங்களை முன்வைத்து அவர் இந்த உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளார்.

அத்துடன், அவர் தன்னை கருணைக் கொலை செய்யக்கோரி பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதிவிட்டு சாகும்வரை உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வருகிறார்.

அதேபோல் வேலூர் சிறையில் நளினி மற்றும் அவரது கணவர் முருகன் ஆகிய இருவர் துன்புறுத்தப்படுவதால் தங்களை புழல் சிறைக்கு மாற்றக்கோரியிருந்தார். அதனை சிறை நிர்வாகம் மறுத்துவிட்டது.

இதனால் தங்கள் இருவரையும் பெங்களூர் சிறை அல்லது வேறு மாநில சிறைக்கு மாற்றக்கோரி தமிழக உள்துறைச் செயளருக்கு மனு அனுப்பியுள்ளார்.

ஆளுநரை கண்டித்து வேலூர் மத்திய சிறையில் உண்ணாவிரத போராட்டத்தை தொடரும் முருகனுக்கு ஆதரவாக, மகளிர் சிறையில் உள்ள நளினியும் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் நளினி, மற்றும் முருகனிடம் சிறை துறையினர் தொடர்ந்தும் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.