சட்டவிரோதமாக ஊடுருவிய அனைவரும் இந்தியாவிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்! இலங்கை தமிழர்களின் நிலை?

Report Print Murali Murali in இந்தியா

இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய அனைவரும், 2024 ஆம் ஆண்டுக்குள் தேசிய குடிமக்கள் பதிவேட்டைப் பயன்படுத்தி, வெளியேற்றப்படுவார்கள் என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

மத்திய அமைச்சரும், பாஜக தலைவருமான அமித் ஷா, ஜார்க்கண்ட் மாநிலத்தில் சாய்பாசா என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர், “தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறைப்படுத்துவதன் மூலம், இந்தியாவிற்குள் ஊடுருவிய அனைவரும் 2024ம் ஆண்டுக்குள் நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவார்கள்.

இந்தியாவிற்குள் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை வெளியேற்ற முடியாது என ராகுல் காந்தி கூறிவருகின்றார்.

அத்துடன், சட்டவிரோத குடியேற்றிகளை வெளியேற்றினால் அவர்கள் எங்கே போவார்கள் என்றும் வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வார்கள் என்றும் ராகுல் காந்தி கேள்வியெழுப்பி வருகின்றார்.

ஆனால், நாடு முழுவதும் 2024ம் ஆண்டுக்குள் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்படும் என்றும் சட்டவிரோதமாக குடியேறிய அனைவரும் அடுத்த மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவார்கள் என்றும் அமித்ஷா உறுதிபடக் கூறினார்.

இதேவேளை, நாட்டிற்குள் சட்டவிரோத குடியேறியவர்களை அடையாளம் காணும் விதத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு முறை, முதல்கட்டமாக அசாம் மாநிலத்தல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதே போன்று அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்தப்படும் என்று அமித்ஷா ஏற்கனவே அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இலங்கையிலிருந்து இந்தியாவின் தமிழ்நாட்டுப் பகுதிகளுக்கு சென்ற தமிழர்கள் பலர் அங்கு அகதிகளாக வாழ்ந்து வரும் நிலையில், இந்திய அரசின் இந்த அறிவிப்பு அவர்களுக்கு பெரும் பாதிப்பாக அமையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.