இந்தியா நாடாளுமன்றத்தில் மறுக்கப்பட்ட இலங்கை அகதிகளின் குடியுரிமை! காரணம் என்ன?

Report Print Kanmani in இந்தியா

இந்தியாவில் வாழ்ந்து வரும் இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படமாட்டாதென இந்திய மத்திய அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேல் இந்தியாவில் வசிக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்தியாவில் நிரந்தரக் குடியுரிமை அளிக்கப்படுமா என்ற கேள்வியினை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினைச் சேர்ந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் நாடாளுமன்றத்தின் மக்களவையில் முன்வைத்த போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு, இந்திய நிரந்தரக் குடியுரிமை வழங்கப்படும் என்றால் அது குறித்த விபரங்களைத் தெரிவிக்குமாறும், குடியுரிமை வழங்கப்படாதெனில், அதற்கான காரணங்களைக் கூறுமாறும் தனது கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.

இதன்போது வேறொரு நாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் குடிபெயர்ந்தவர்கள் இந்த விதத்தில் இந்திய குடியுரிமையைப் பெற முடியாது என வெளிவிவகாரங்களுக்குப் பொறுப்பான இணை அமைச்சர் நித்தியானந்த ராய் தெரிவித்துள்ளார்.

இந்தியக் குடியுரிமை என்பது இந்தியக் குடியுரிமைச் சட்டம் 1955 மற்றும் குடியுரிமை விதிகள் 2009 இன் அடிப்படையில் வழங்கப்படுகின்றன.

அந்த சட்டத்தின் பிரிவு 5 இன் படி, பதிவு செய்துகொண்ட அயல்நாட்டவர் எவரும் இந்தியக் குடியுரிமை பெற முடியும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.