நாளைய தினம் இந்தியாவுக்கு பயணிக்கிறார் சம்பந்தன்

Report Print Rakesh in இந்தியா

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நாளைய தினம் இந்தியாவுக்கு புறப்பட்டு செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கடந்த காலங்களிலும் மருத்துவ சிகிச்சைக்காக இரா.சம்பந்தன் இந்தியாவுக்குச் சென்றுள்ளார். இந்த பயணங்களின் போது புதுடில்லியின் முக்கிய அதிகாரிகள், பிரமுகர்களை அவர் சந்திப்பது வழமை.

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச தெரிவு செய்யப்பட்டுள்ளார். புதிய ஜனாதிபதியை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவுக்கு அழைத்து சந்தித்தார்.

இந்தச் சந்திப்பில் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருந்தார்.

அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தக் கோரியிருந்தார். ஆனால், இந்தியாவில் வைத்தே கோட்டாபய அதனை நிராகரித்திருந்தார்.

இவ்வாறானதொரு நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியப் பிரதமரை சந்தித்துப் பேச்சு நடத்த விரும்பியிருந்தது. இந்த சூழலிலேயே சம்பந்தன் இந்தியாவுக்கு பயணமாகின்றார். அவர் எதிர்வரும் 30ஆம் திகதியே நாடு திரும்புவார் என தெரியவருகிறது.