பலத்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இந்தியா செல்லும் ட்ரம்ப்! 5 அடுக்கு பாதுகாப்புடன், 25000 பொலிஸார் களத்தில்

Report Print Sujitha Sri in இந்தியா

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்றைய தினம் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் முதலில் அவர் குஜராத்தின் அகமதாபாத்துக்கு செல்லவுள்ளதாக தெரியவருகிறது.

பலத்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இந்த விஜயம் இடம்பெறவுள்ளதுடன், அகமதாபாத் நகரில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, 25000 இற்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை நகரின் முக்கிய பகுதிகள் ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், முக்கிய பகுதிகளில் 400 அதிநவீன கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை சுமார் 400 அமெரிக்க அதிகாரிகள் அகமதாபாத்தில் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வருகின்றனர்.

டொனால்ட் ட்ரம்பின் 'பீஸ்ட்' கார், 'மரைன் ஒன்' ஹெலிகாப்டர் என்பன அகமதாபாத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

அமெரிக்க விமானப் படையின் 3 ஹெர்குலஸ் விமானங்களும், அகமதாபாத் விமான நிலையத்துக்கு வந்துள்ள நிலையில் ட்ரம்பின் பாதுகாப்புக்காக மட்டும் 100 கோடி ரூபா வரையில் செலவிடப்பட்டுள்ளதாக குஜராத் அரசு வட்டாரங்களை மேற்கோள்காட்டி அந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் டொனால்ட் ட்ரம்ப் இன்று இந்தியாவிற்கான தனது முதல் விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் முதல்கட்டமாக அவரும், அவரது பாரியார் மெலானியாவும் இன்று காலை 11.40 மணிக்கு அகமதாபாத்தை அடையவுள்ளதுடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று அவர்களை வரவேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.