உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சந்தேகநபரின் வீட்டிற்கு சென்றாரா ரிசாத் பதியுதீன்? வழங்கப்பட்டுள்ள சாட்சியம்

Report Print Rakesh in இந்தியா
113Shares

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் குறித்து அறிந்து கொள்ள தாம் முன்னாள் இராணுவத்தளபதி மகேஸ் சேனாநாயக்கவுக்கு மூன்று தடவைகள் தொலைபேசியில் தொடர்பு கொண்டதாக முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் சாட்சியமளித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிற்று தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு நவீன தொழிநுட்பத்தின் மூலம் விளக்கமறியலில் இருந்தவாறே அவர் இந்த சாட்சியத்தை வழங்கியுள்ளார்.

முன்னாள் இராணுவத்தளபதிக்கு மூன்றாவது தடவையாக தொலைபேசியின் ஊடாக தொடர்பு கொண்ட போதே கைது செய்யப்பட்டவர், மொஹமட் ஹனீபா மொஹினுதீன் என்பவரின் மகன் என்பதை தாம் அறிந்து கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மொஹமட் ஹனீபா மொஹினுதீன் என்பவர் தாம் வகித்த மீள்குடியேற்ற அமைச்சில் செயலணி செயலாளராக பதவி வகித்ததாக ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

அவர் தமது மகன் கைது செய்யப்பட்டதாக தமக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியமையை அடுத்தே முன்னாள் இராணுவத்தளபதியை தாம் தொடர்பு கொண்டு விசாரித்ததாக ரிசாத் பதியுதீன் சாட்சியமளித்துள்ளார்.

இந்தவிடயம் தொடர்பிலேயே தாம் மொஹினுதீனின் வீட்டுக்கு சென்றதாக தெரிவித்த ரிசாத் பதியுதீன், அங்கிருந்த தெஹிவளை பொலிஸ் பொறுப்பதியை வினவியபோது அவர் மொஹினுதீனின் மகனை கைது செய்யவில்லை என்று கூறினார்.

இதனையடுத்து சிரேஸ்ட பொலிஸ் அதிபரை தொடர்பு கொண்டபோது அவரும் அதனையே தெரிவித்தார்.

இந்த நிலையில் மொஹினுதீனின் மகனை எவ்வாறு கண்டுபிடிக்கலாம் என்று அவரிடம் கேட்டபோது இராணுவத்திடம் விசாரிக்குமாறு அவர் கூறியதாக ரிசாத் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்தே முன்னாள் இராணுவத்தளபதியை தாம் தொடர்புகொண்டதாக சாட்சியான ரிசாத் பதியுதீன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில் மூன்றாவது தடவையாக இராணுவத்தளபதியுடன் தொடர்பு கொண்ட போதே அவர் மொஹினுதீனின் மகன் கைது செய்யப்பட்ட விடயத்தை தம்மிடம் கூறியதாக ரிசாத் பதியுதீன் கூறியுள்ளார்.

இதற்காகவே தாம் கைது செய்யப்பட்டவரின் வீட்டுக்கு சென்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் நடந்த பின்னர் ரிசாத் பதியுதீன் கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் வீட்டுக்கு வந்ததாக ஆணைக்குழுவின் கடந்த அமர்வின்போது தெஹிவளை - கல்கிஸ்ஸை கிராமசேவகர் ஒருவர் சாட்சியமளித்திருந்தார்.

இந்த சாட்சியம் தொடர்பிலேயே முன்னாள் அமைச்சர் ரிசாத்தின் நேற்றைய தினம் சாட்டியம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.