பேரறிவாளன் விடுதலையில் எங்களுக்கு தொடர்பு இல்லை! சி.பி.ஐ திட்டவட்டம்

Report Print Murali Murali in இந்தியா
266Shares

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜூவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன் விடுதலை தொடர்பில் ஆளுநரே முடிவெடுக்க வேண்டும் என சி.பி.ஐ அறிவித்துள்ளது.

சிறையில் இருக்கும் பேரறிவாளன் தன்னை விடுதலை செய்ய வேணடும் என கோரி உச்ச நீதிமன்றில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு கடந்த 3ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதனையடுத்து குறித்த மனு மீதான வழக்கு 23ம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில், ஆளுநர் முடிவெடுக்க, நவம்பர் 23ம் திகதிவரை காலக்கெடு நிர்ணயித்தது உச்சநீதிமன்றம்.

இந்த நிலையில் இன்று சி.பி.ஐ தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், இந்த விவகாரத்தில் சி.பி.ஐ தலையிடாது என தெளிவுப்படுத்தியுள்ளது.

சி.பி.ஐ தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பேரறிவாளன் விடுதலை தொடர்பாக முடிவெடுக்க வேண்டியது ஆளுநர்தான். அதற்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பேரறிவாளன் விடுதலை தொடர்பாக எங்களுடன் ஆளுநர் கலந்து ஆலோசிக்க வேண்டியது இல்லை.

பெல்ட் வெடிகுண்டு விவகாரம் தொடர்பான விசாரணை விவரத்தை யாரிடமும் பகிர்ந்து கொள்ள தேவையில்லை. சர்வதேச சதி பற்றிய பன்னோக்கு ஆணையத்தின் விசாரணைக்கும், பேரறிவாளன் விடுதலைக்கும் எந்த தொடர்பும் இல்லை.

பன்னோக்கு விசாரணை ஆணையத்தின் விசாரணை எந்த அளவில் இருக்கிறது என்பது பற்றி கேட்டு ஆளுநரிடம் இருந்து சி.பி.ஐக்கு எந்த கோரிக்கையும் வரவில்லை.

பேரறிவாளனை விடுவிப்பதா, இல்லையா என்பதை ஆளுநர்தான் முடிவெடுக்க வேண்டும். எங்களுக்கு எந்தத் தொடர்பும் கிடையாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சென்னையில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து தமிழக முதலமைச்சர் பேரறிவாளன் விடுதலை விடயத்தில் நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.