ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் 7 பேரையும் ஹீரோ ஆக்காதீர்கள்! கார்த்தி சிதம்பரம் ஆவேசம்

Report Print Banu in இந்தியா
122Shares

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் 7 பேரை மட்டும் ஏன் பேசுகிறீர்கள், அந்த சம்பவத்தில் இறந்து போன மற்ற 15 பேரைப் பற்றி ஏன் பேசுவதில்லை, ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை ஹீரோ ஆக்காதீர்கள், அவர்கள் ஹீரோக்கள் அல்ல என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, 25 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் இருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயகுமார், ரொபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், நளினி ஆகியோரை விடுவிக்க வேண்டும் எனக் கோரி அதிமுக, திமுக, உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றன.

உச்ச நீதிமன்றம், சிபிஐ ஆகிய அமைப்பும் 7 பேரை விடுவிக்க மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை. இவர்கள் 7 பேரையும் விடுவிக்கக் கோரி கடந்த 2018ஆம் ஆண்டு தமிழக அரசு, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்குப் பரிந்துரை செய்துவிட்டது. ஆனால், ஆளுநர் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.

இந்நிலையிலே கார்த்தி சிதம்பரம் ஊடகமொன்றிற்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைகூறியுள்ளார்.

அவர் இதன் போது மேலும் தெரிவிக்கையில்,

ராஜீவ் காந்தியுடன் இறந்தவர்கள் எத்தனை பேர் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், ராஜீவ் காந்தியின் கொலையோடு தொடர்புடைய 7 பேரின் பெயர்கள் மட்டும் அனைவருக்கும் தெரிகிறது. இதுதான் தமிழ்நாடு.

இறந்தவர்களின் பெயர்களை நான் சொல்கிறேன். கோகிலா எனும் பெண், வின்சென்ட் என்ற காவல் ஆய்வாளர், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முனுசாமி, இளையான்குடியிலிருந்து ஆய்வாளர் இக்பால், ஆய்வாளர் ராஜ் குரு; 15 பேரின் பெயர்கள் தெரியாவிட்டாலும் இவர்களின் பெயர் எனக்குத் தெரிந்திருக்கிறது.

கொலைக் குற்றவாளிகள் 7 பேரும் ஆயுள் தண்டனைக் கைதிகளாக, 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கிறார்கள் என்பது ஒருபுறம் இருக்கட்டும். தமிழகத்தில் தமிழ், தமிழ் எனப் பேசும் கட்சிகள் என்றாவது ஒருநாள் ராஜீவ் காந்தியுடன் சேர்ந்து இறந்துபோன 15 பேரின் பெயரைக் கூறியிருக்கின்றனவா?

இவர்கள் எல்லாம் தமிழர்கள் இல்லையா, இவர்களுக்கெல்லாம் நியாயம் கிடையாதா. இவர்களைப் பற்றி என்றாவது அந்தக் கட்சிகள் பேசியிருக்கின்றனவா? ஒருநாள் கூட பேசியதில்லை.

சட்டரீதியாக ஆயுள் தண்டனைக் கைதி குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பின் விடுவிக்கப்படுகிறார்கள் எனச் சட்டத்தில் இடம் இருந்தால் விடுவிக்கட்டும். அதற்கு நான் மறுத்துக் கூறவில்லை. ஆனால், அந்தக் கொலைக் குற்றவாளிகள் 7 பேரையும் ஹீரோவாக சித்தரிக்காதீர்கள்.

அந்த 7 பேரும் ஹீரோக்கள் அல்ல. இவர்கள் 7 பேரும் நீதிமன்றத்தால் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்கள். இவர்களை ஹீரோ ஆக்காதீர்கள்.

ஆனால், இந்த 15 பேரைப் பற்றி ஒருநாளும் பேசவில்லையே. இது எவ்வளவு வருத்தமாக இருக்கிறது என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.