விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்ல அனுமதி மறுப்பு! மீனவர்கள் முற்றுகை போராட்டம்

Report Print Ashik in இந்தியா
63Shares

புதிய மீன்பிடி விசைப்படகுகள் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க செல்ல மீன் வளத்துறையினர் அனுமதி மறுத்துள்ளதை கண்டித்து மீனவர்களால் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டம் இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.

ராமேஸ்வரம் துறைமுகத்தில் சுமார் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

சமீப காலமாக வெளி மாவட்டங்களான கன்னியாகுமரி, தூத்துக்குடி, நாகப்பட்டினம், காரைக்கால் பகுதிகளில் இருந்து மீனவர்களின் மீன்பிடி படகுகளை விலைக்கு வாங்கி வந்து ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

புரெவி மற்றும் நிவர் புயல் காரணமாக மீன்பிடி விசைப்படகுகளை ராமேஸ்வரம் துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்த மீன் வளத்துறையினர் அறிவுறுத்தியிருந்த நிலையில் ராமேஸ்வரம் மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பாக நிறுத்த போதிய இடம் இல்லாததால் நூற்றுக்கு மேற்பட்ட விசைப்படகுகளை பாம்பன் பாலம் வழியாக பாம்பன் குந்துகால் பகுதியில் நிறுத்தியுள்ளனர்.

இதனால் புதிய விசைப்படகுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் படகுகளை ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து அப்புறப்படுத்துமாறு மீன்வளத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதனையடுத்து இன்று புதிதாக ராமேஸ்வரம் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 23 விசைப்படகுகளுக்கு மீன்வளத்துறையினரால் வழங்கப்படும் மீன்பிடி அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனை கண்டித்து படகுகளின் உரிமையாளர்கள் மற்றும் மீனவர்கள் என சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் மீன் வளத்துறை அதிகாரிகள் அலுவலகத்தில் அமர்ந்து முற்றுகை போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களுடன் மீன்வளத்துறை அதிகாரிகள், பொலிஸார் நடத்திய பேச்சுவார்த்தையில் மீன்வளத்துறை உயர் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தையடுத்தது மீனவர்கள் கலைந்து சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டதாக தெரிவிக்கபப்டுகிறது.

இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு விடுவிக்கப்படாமல் சேதமடைந்து மீட்டு வர முடியாமல் இருந்த படகுக்கான ஆவணங்களை கொண்டு நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில், புதிய படகுகளை வாங்கி வந்து ராமேஸ்வரத்தில் தொழில் செய்து வருவதாகவும், மீன் வளத்துறை அதிகாரிகள் முழுமையாக படகுகளை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.