இலங்கையின் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவித்துக்கொள்ள இந்தியா விரைவான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தா தெரிவித்துள்ளார்.
கடந்த 14ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் இலங்கையின் கடற்படையினரால் 36 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.கைது செய்யப்பட்ட இந்த 36 பேரும் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் இந்த மாத இறுதியில் மீனவர் பிரச்சனை தொடர்பாக இரண்டு நாட்டு அதிகாரிகளுக்கும் இடையில் நடைபெறும் சந்திப்புக்கு முன்னர் தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று இந்தியா ஏற்கனவே வலியுறுத்தியுள்ளது.
எனினும் இந்த விடயத்தில் இந்தியாவே தமது நல்லெண்ணத்தை முதலில் காட்டவேண்டுமென்று அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா தெரிவித்துள்ளார்.
இந்திய மீனவர்கள் இழுவைப்படகுகள் மூலம் இலங்கையின் வடகடலில் மீன்பிடியில் ஈடுபடுவதை நிறுத்திக் கொள்ளவேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மத்தியிலேயே இந்திய வெளியுறவு செய்தித் தொடர்பாளரின் தகவல் வெளியாகியுள்ளது.