ராஜீவ் காந்தி கொலை வழக்கு! ஏழு தமிழர்களின் விடுதலை குறித்து வெளியாகியுள்ள முக்கிய தகவல்

Report Print Ajith Ajith in இந்தியா
1970Shares

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஏழு குற்றவாளிகளை விடுவிக்குமாறு தமிழக அரசாங்கம் மேற்கொண்டுள்ள பரிந்துரை தொடர்பில் தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோஹித் இன்னும் மூன்று அல்லது நான்கு நாட்களில் முடிவெடுப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய உச்சநீதிமன்றத்தில் இன்று இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் எதிர்வரும் மே மாதத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்கு முன்னர் இது முக்கிய விடயமாக கருதப்படுகிறது.

அரசசட்டவாதி துஷார் மேத்தாவிடமிருந்து தகவல்களைப் பெற்ற பின்னர் அதிகாரப்பூர்வ தகவல் தொடர்பு பின்பற்றப்படும் என்று சென்னையில் உள்ள ராஜ்பவன் தெரிவித்துள்ளது.

இந்த விடயத்தில் தமக்குள்ள பொறுப்பு முடிந்துவிட்டது, அது இப்போது ஆளுநருக்கும், மத்திய அரசாங்கத்துக்கும் இடையில் இருக்கின்ற விடயமாகும் என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தலைவரும், சட்ட அமைச்சருமான சி.வே.சண்முகம் தெரிவித்துள்ளார்.

ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, தமிழகத்தின் அரசியல் கட்சிகளும், செயற்பாட்டாளர்களும் ராஜீவ் காந்தி கொலை தண்டனையாளிகளை விடுவிக்குமாறு கோரி வருகின்றனர்.

நளினி ஸ்ரீஹரன், வி. ஸ்ரீஹரன் அல்லது முருகன், ஏ.ஜி.பேரறிவாளன், சாந்தன், ஜெயக்குமார், ரொபர்ட் பயாஸ் மற்றும் பி.ரவிச்சந்திரன் ஆகியோரே தண்டனையாளிகளாவர்.

இந்தநிலையில் தமது மகனின் விடுதலைக்காக போராடி வரும் பேராரிவாளனின் தாய் அற்புதம் அம்மாள், தனது மகனை அரசாங்கம் விடுவிக்கும் தாம் நம்புவதாக ட்வீட் செய்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் மற்றும் மகள் பிரியங்கா ஆகியோர் குற்றவாளிகளை மன்னித்திருந்தாலும், குற்றவாளிகளின் விடுதலை தொடர்பாக மாநில மற்றும் மத்திய காங்கிரஸ் தலைமைகளுக்கு மத்தியில் கருத்து வேறுபாடுகள் உள்ளன.