என்னைத் தடுப்பது சசிகலா குடும்பம் தான்! ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா பேட்டி!

Report Print Samy in நேர்காணல்

ஒரு மாதம் கடந்தும் அப்பல்லோவில் சிகிச்சை பெற்றுவரும் முதல்வர் ஜெயலலிதாவின் நலன் விசாரிக்க பலரும் வருகிறார்கள். ஆனால், அவரது இரத்த சொந்தமான அண்ணன் மகள் தீபாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டே வருகிறது. இதனால் மிகுந்த வருத்தமடைவதாக சொன்ன தீபா,ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணல்

உங்கள் அத்தை ஜெயலலிதாவை நீங்கள் பார்ப்பதற்கு அப்பல்லோவில் யார் தடுக்கின்றனர்?

அத்தையை அப்பல்லோவில் திடீரென சேர்த்திருப்பதாக மீடியாவில் செய்தியைப் பார்த்ததுமே எனக்கு அதிர்ச்சி. என்னாச்சோங்கிற பதைபதைப்பு. 23-ந்தேதி காலையிலேயே அப்பல்லோவுக்கு ஓடினேன். கிரீம்ஸ் சாலையிலிருந்தே போலீஸாரின் கெடுபிடிகள் துவங்கியிருந்தன. கேட்டை இழுத்து மூடிவிட்டனர். மாலை வரை காத்திருந்துவிட்டு அழுதபடியே திரும்பினேன்.

அடுத்தடுத்த நாளும் இதே நிலைதான். 28-ந் தேதி மாலை மருத்துவமனையின் வரவேற்பு அறை வரை எனக்கு அனுமதி கிடைத்தது. அங்கிருந்த போலீஸ் அதிகாரிகளிடம், முதலமைச்சரின் அண்ணன் பொண்ணு நான். தீபாங்கிறது என் பேரு. எங்க அத்தையை நான் பார்க்கணும்'னு சொன்னேன். அவர்கள், உயரதிகாரிகள் சிலரிடம் பேச, அவர்களும் யாரிடமோ பேசினார்கள். ஆனால் எனக்கு எந்தப் பதிலும் தெரிவிக்கலை.

விடிய விடிய வெயிட் பண்ணிட்டு அனுமதி கிடைக்காததால் கிளம்பி விட்டேன். மருத்துவமனை நிர்வாகத்திடம் பேசினேன். அவர்களும் யாரிடமோ பேசிவிட்டு, அனுமதி மறுத்து விட்டார்கள். அதிகாரிகளும் அப்பல்லோ நிர்வாகமும் என் அத்தையை சூழ்ந்திருக்கும் சசிகலா தரப்பினரிடம்தான் அனுமதி கேட்கிறார்கள்னு புரிஞ்சிக்க முடியுது. அவர்களால்தான் தடுக்கப் படுகிறேன். என்னைத் தடுக்க இவர்கள் யார்?

குடும்ப உறவுகளுக்கு அப்பாற் பட்டவரான உங்கள் அத்தைக்கும் உங்களுக்குமான உறவுகள் எப்படி?

என்னுடைய அப்பா ஜெயக்குமார் மீது -அதாவது தன்னுடைய அண்ணன் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் அளவு கடந்த பாசம் வைத்திருந்தவர் என் அத்தை. நான் பிறந்ததே கார்டனில் தான். எனக்குப் பெயர் வைத்ததும் அத்தைதான்னு அப்பாவும் அம்மாவும் என்னிடம் சொல்லியிருக்காங்க. எனக்கு விபரம் தெரிந்த வயதில் அத்தையே என்னிடம், "உனக்குப் பெயர் வைத்தது நான்தாண்டா' என சொன்னபோது ஏற்பட்ட உணர்வு இருக்கே, அவ்வளவு நெகிழ்ச்சியானது அது.

நாங்கள் ராயப்பேட்டை வீட்டுக்கு வந்த பிறகும், ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் எங்களை கார்டனுக்கு அழைத்து, பேசி சிரித்து மகிழ்ந்திருப்பார். உடல் ஆரோக்கியத்தில் கவனம் இருக்கணும்னு அடிக்கடி என் அப்பாவுக்கு அறிவுறுத்துவார்.

ஒரு தாய், தன் குழந்தைக்கு எதையெல்லாம் சொல்லி வளர்ப்பாரோ அதுபோல என்னிடம் "நேர்மையாக இரு!மனசாட்சிக்கு கட்டுப்பட்டு வாழ்! உண்மையைச் சொல்வதில் தயங்காதே! ஜெயிப்பதற்காக கடுமையாக உழை!தைரியத்தை வளர்த்துக்கொள்! பிடிக்காத விசயங்களில் சமரசம் செய்துகொள்ளாதே! என்றெல்லாம் நிறைய அறிவுரைகளைச் சொல்லியிருக்கிறார். அந்த வகையில், எனக்கு அவர் அத்தை அல்ல, அம்மா!

இப்படிப்பட்ட உறவில் எப்படி பிரிவு ஏற்பட்டது? யார் காரணம்?

சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த சுதாகரன் திருமணம் 1995-செப்டம்பரில் நடந்தது. அக்டோபரில் என் அப்பா இறந்து போனார். அப்போ எங்கள் வீட்டுக்கு வந்து ஆறுதல் சொன்ன அத்தை, "அடுத்த வாரம் வீட்டுக்கு வா'ன்னு சொல்லிட்டுப்போனாங்க. ஆனா, எப்போதும் போல எங்களால் கார்ட னுக்குள் போகமுடியவில்லை. பல மாற்றங்கள் நடந்திருப்பது புரிந்தது.

வாரத்திற்கு இரண்டு மூன்றுமுறை எங்கள் வீட்டுக்குப் போன் பண்ணிப் பேசியவர் அத்தை. அவரே டயல் செய்துதான் பேசுவார். அப்படிப்பட்டவரிடமிருந்து போன் வருவது கட்டானது. நான் போன் பண்ணினாலும் யாரோ எடுத்து, கட் செய்தார்கள். பேக்ஸ் வழியாக பல கடிதங்கள் எழுதியிருக்கேன். அதெல்லாம் அத்தை கைக்குப் போனதாங்கிறதே சந்தேகம்தான்.

1996-ல் அவர் கைது செய்யப்பட்டு சென்னை சென்ட்ரல் ஜெயிலில் இருந்தபோது அவரைப் போய்ப்பார்த்து கதறினேன். அவங்க தைரியமா இருந்து எனக்கு ஆறுதல் சொல்லி அனுப்பினாங்க. 2001-ல் மீண்டும் முதல்வரானாங்க அத்தை. 2002-ல் அவரை சந்திக்க எனக்கு வாய்ப்பு வந்தது. அதுதான் அத்தையை சந்தித்த கடைசி நாள்.

6 மணிநேரம் என் னோடு இருந்தாங்க. நான் அனுப்பிய பேக்ஸ், கடிதங்கள் எதுவும் அவருக்கு தெரிந்திருக்கவில்லை. கார்டனுக்கு நான் வந்ததும், உள்ளே விடாமல் தடுக்கப்பட்டதும் கூட தெரியவில்லை. உடனே, மேனேஜர் பொறுப்பில் இருந்தவரை அழைத்து, "என்னோட அண்ணன் பொண்ணு இவர். எனக்கு மகள் மாதிரி'ன்னு சொன்னாங்க. ஆனாலும் கார்டனில் பழைய நிலைமைதான் நீடித்தது. காரணம் அத்தையை சுற்றி இருக்கும் சசிகலா குடும்பம்தான்னு நினைக்கிறேன்.

அவர்கள் எதற்கு உங்களைத் தடுக்க வேண்டும்?

என்னை மகளாக சுவீகாரம் செய்துகொள்ள அத்தை விரும்பியிருக்கிறார் என்பது எங்களுக்குப் பின்னாளில் தெரிந்தது. இந்த விசயம் சசிகலா குடும்பத்தினருக்குப் பிடிக்காமல் இருந்திருக்கலாம். அதனால் எங்களைப்பற்றி நெகடிவ்வாக அத்தையிடம் சொல்லி அவரது மனதை கலைத்திருக்கிறார்கள் என்பதே எங்களுடைய சந்தேகம்.

2002 - காலகட்டத்தில் ஒருமுறை என்னிடம் பேசிய சசிகலா, "உங்க அத்தைக்கு உன்னைப் பிடிக்கவில்லை. அதனால் இனி கார்டன் பக்கம் வரக்கூடாது. கார்டனுக்கு வரக்கூடாதுன்னு சொல்லச் சொன்னாங்க' எனச் சொன்னார். "அத்தைகிட்டே போனை கொடுங்க. என்கிட்டே அவங்க சொல்லட்டும். எங்களுக்கு இடையில நீங்க யாரு'ன்னு கேட்டேன். இப்பவும் நான் கேட்கிறேன், எங்க அத்தைக்கு அவர்கள் யார்? எங்களிடமிருந்து அத்தையை பிரித்ததன் நோக்கம் என்ன?

இரத்த சொந்தம்ங்கிற முறையில் நீதிமன்றத்தை அணுகி ஜெயலலிதாவைப் பார்க்க அனுமதி பெறலாமே?

சொந்த அத்தையை பார்ப்பதற்கு கூட எனக்கு உரிமை இல்லையா? அதற்காக கோர்ட்டுக்குப் போகணுமா? அந்தளவுக்கு எல்லோரும் மனசாட்சியை அடகு வைத்து விட்டார்களா? ரொம்ப கொடுமை இது. மருத்துவ சிகிச்சையில் இருக்கும் என் அத்தைக்கு என்னுடைய நடவடிக்கைகள் மேலும் மன உளைச்சலையோ வருத்தத்தையோ தந்துவிடக் கூடாதுங்கிறதினாலத்தான் அந்த முயற்சியை நான் எடுக்கவில்லை.

உங்களை அரசியல் வாரிசாகவோ அல்லது சொத்துக்களுக்கு வாரிசாகவோ எதிர்காலத்தில் ஜெயலலிதா அறிவித்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் இப்படியெல்லாம் நடப்பதாக நினைக்கிறீர்களா?

எனக்குத் தெரியவில்லை. ஆனா, என் அத்தை என்னை மகளாக வளர்க்க ஆசைப்பட்டார்ங்கிறது மட்டும் எனக்குத் தெரியும். அத்தையின் பொலிட்டிக்கல் டைமன்ஷன் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதற்காக நான் அரசியலுக்கு ஆசைப்படுகிறேன்னு நினைச்சிடக் கூடாது. அடிப்படையில் நான் ஒரு ஜர்னலிஸ்ட். அந்தக் கோணத்தில்தான் அரசியலைப் பார்ப்பேன். அரசியல்ங்கிறது அவ்வளவு சுலபமானதும் கிடையாது.

அதேபோல, சொத்துக்கள் மீதும் எங்களுக்கு ஈர்ப்பு இருந்ததில்லை. வாழ்வதற்குரிய அனைத்து வசதிகளும் எங்களிடம் இருக்கிறது. அத்தையின் சொத்துகள், பணம் எல்லாத்தையும் அவர்கள் எடுத்துக்கொண்டு போகட்டும். என் அத்தையை மட்டும் எங்களிடம் அனுப்பி வைத் தால் போதும். நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். செய்வார்களா?

கார்டனை விட்டு 2011 இறுதியில் சசிகலாவை ஜெயலலிதா வெளியேற்றினார். அப்போது நீங்கள் கார்டனுக்குள் போயிருக்கலாமே?

அப்போதான் ஜர்னலிசம் படிப்பதற்காக லண்டன் போயிருந் தேன். உடனடியாக என்னால் திரும்ப முடியாத சூழல். விசயம் கேள்விப்பட்டு, லண்டனிலிருந்து கார்டனுக்கு போன் செய்து நான் யாரென்பதை சொன்ன போது, "அம்மாவுக்கு (என் அத்தைக்கு) அண்ணனே கிடையாது'ன்னு சொல்லி போனை துண்டிச்சிட்டாங்க. சசிகலா வெளியேறி யிருந்தாலும் கூட கார்டனில் அவங்க உருவாக்கி வைத்திருந்த செட்அப் அப்படியேதான் இருந்திருக்குன்னு புரிஞ்சிக்க முடிந்தது.

சசிகலாவை தனது உடன்பிறவா சகோதரின்னு சொன்னவர் ஜெயலலிதா. அவரையே வெளியேற்றியிருக்காங்கன்னா அதற்கு என்ன காரணம்னு உங்களுக்குத் தெரியுமா?

தனிப்பட்ட காரணம் எதுவும் எனக்குத் தெரியாது. ஆனா, என்.டி. டி.வி.க்கு சசிகலாவின் கணவர் எம்.நடராஜன் தந்த பேட்டியில் ஒரு கேள்விக்கு, சந்தேகம் வரக்கூடாது, வந்துடுச்சுன்னா அங்கு இருக்கிறது சரியில்ல' என்கிற ரீதியில் பதிலளித்திருப்பார். இவர்கள் மீது எங்க அத்தைக்கு என்ன சந்தேகம் வந்தது? சொத்து மீதான சந்தேகமோ, அதிகாரம் மீதான சந்தேகமோ இருக்க வாய்ப்பில்லை. என்ன சந்தேகம் என்று என் சிற்றறிவுக்கு எட்டவில்லை. நிச்சயம் ஒரு நாள் விடை கிடைக்கும்.

- Nakkheeran

Comments