பாதிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க கிழக்கு ஆளுநர் முடிவு

Report Print Mubarak in வேலைவாய்ப்பு

கிழக்கு மாகாணத்தில் வழங்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் அநீதிகள் மற்றும் முறைகேடுகள் இழைக்கப்பட்டிருந்தால் தமது முறைப்பாடுகளை மேன்முறையீட்டு சபையிடம் ஒப்படைக்குமாறு கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகம தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் நியமனத்தின் போது பாதிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் நாளுக்கு நாள் ஆளுனரிடம் தமது கவலைகளையும் கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்தநியைில் பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் விடயத்தில் அக்கறை காட்டிய கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகம, பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயமான தீர்வினை வழங்கும் நோக்கில் உடனடியாக மேன்முறையீட்டு சபையொன்றினை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் பட்டதாரி நியமனத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது மேன் முறையீடுகளை தனித்தனியாக எழுதி கிழக்கு மாகாண ஆளுனர் செயலாளரிடம் ஒப்படைக்குமாறும் அவர் இதன் போது குறிப்பிட்டார்.

அத்துடன் இம்முறையீடு தொடர்பாக தேர்தல் முடிவடைந்தவுடன் சிறந்த தீர்வினை வழங்கவுள்ளதாகவும் தங்களது மேன் முறையீடுகளை செயலாளர் கிழக்கு ஆளுனர் அலுவலகம், திருகோணமலை எனும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறும் கிழக்கு மாகாண ஆளுனர் பாதிக்கப்பட்டவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.