மிருசுவில் படுகொலை! மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரியை விடுதலை செய்யுமாறு கோரிக்கை!

Report Print Samy in வாழ்க்கை முறை

மிருசுவிலில் சிறுவர்கள் உள்ளிட்ட எட்டுப் பொதுமக்களைப் படுகொலை செய்த குற்றச்சாட்டில், மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரிக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு அளித்து விடுவிக்க வேண்டும் என்று தேசிய சுதந்திர முன்னணி் கோரியுள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயந்த சமரவீர, மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணியைச் சேர்ந்த சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பு அளித்து விடுவிக்க வேண்டும்.

187 சிறைக்கைதிகள் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பை பெற்றுள்ளனர். இவர்களில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள், பாலியல் வல்லுறவுக் குற்றவாளிகள், பாரிய நிதி மோசடிகளில் ஈடுபட்டவர்கள், பெருமளவு அப்பாவி மக்களின் மரணத்துக்குக் காரணமான விடுதலைப் புலிகள் போன்றவர்களும் அடங்குகின்றனர்.

எனவே, நாட்டுக்காக பாரிய சேவையை ஆற்றிய சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவுக்குப் பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்ய அரசாங்கம் தயங்கக்கூடாது என்று குறிப்பிட்டார்.

2000ம் ஆண்டு டிசெம்பர், 20ம் நாள் மிருசுவிலில் உள்ள தமது வீடுகளைப் பார்வையிடச் சென்ற 8 பொதுமக்கள், இலங்கை இராணுவத்தினரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டு மலசலகூடக் குழிகளில் போட்டு மூடப்பட்டனர்.

இந்தச் சம்பவத்தில் தப்பிச் சென்ற ஒருவர் நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்தியதையடுத்து. சடலங்கள் மீட்கப்பட்டு நடத்தப்பட்ட விசாரணைகளின் முடிவில், சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவுக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் மரணதண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You may like this video

Comments