நிரந்தர வதிவிட வீசாவில் பிரிட்டன் செல்லவிருந்த வயோதிப தம்பதிகளுக்கு விமானநிலையத்தில் நேர்ந்த அவலம்

Report Print Samy in வாழ்க்கை முறை

10 வருட நிரந்தர வதிவிட வீசாவில் பிரித்தானியா செல்லவிருந்த தமிழ் வயோதிபத் தம்பதிகள் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து திருப்பியனுப்பப்பட்டனர்.

இந்தச் சம்பவம் இன்று நண்பகல் நடைபெற்றுள்ளது.

இது குறித்து தெரியவருவதாவது,

முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த வயோதிபத் தம்பதிகள் கடந்த 2011ம் ஆண்டு பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தில் 10 வருடங்களுக்கு நிரந்தர வதிவிட வீசா பெற்றிருந்தனர்.

இவர்கள் வீசா பெற்ற பின்னர் இரண்டு தடவைகள் லண்டன் சென்று அங்கு சில காலங்கள் தங்கியிருந்து விட்டு திரும்பவும் இலங்கையில் தங்கள் சொந்த இடத்திற்கு வந்து தங்கியிருந்துள்ளனர்.

இறுதியாக 2013ம் ஆண்டு போய் வந்துள்ளனர் . அதன்பின்னர் இன்று திரும்ப பிரித்தானியா செல்வதற்கு சென்றிருந்த போதே விமானநிலைய அதிகாரிகளினால் திருப்பி விடப்பட்டுள்ளனர்.

நீண்ட காலமாக இலங்கையில் தங்கியிருந்ததனால் உங்களை அனுப்ப முடியாது என விமான நிலைய அதிகாரிகளினால் காரணம் கூறப்பட்டுள்ளது.

விமானநிலையத்தில் சகல சோதனைகளையும் முடித்து விமானத்திற்கு ஏறச் சென்ற பொழுதே இவர்களை இடைமறித்த அதிகாரிகள் இவர்களது கடவுச்சீட்டை பரிசோதித்து மேற்படி காரணத்தைக் கூறியுள்ளனர்

இவர்கள் இருவரும் தாங்கள் கொண்டு சென்ற பயணப் பொதிகளும் விமானநிலைய அதிகாரிகளினால் பொறுப்பேற்கப்பட்டு விமானத்தில் ஏற்றப்பட்டது.

இவர்கள் இருவரையும் விமானத்தில் ஏற்றுவதற்கு தள்ளு வண்டி (WHEEL CHAIR)யிலேயே கொண்டு செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் குறித்த வயோதிப தம்பதிகள் இருவரையும் பிரித்தானிய தூதரகத்திற்குச் சென்று வீசாவை திரும்பவும் புதுப்பித்த பின் பிரித்தானியா செல்ல முடியும் என அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

தற்போது விமான நிலைய அதிகாரிகள் இருவரின் கடவுச்சீட்டுகளையும் வாங்கிக் கொண்டு சென்றுள்ளனர். அவர்கள் இருவரும் உணவு தண்ணீர் எதுவுமின்றி பெரும் வேதனையுடன் இருப்பதாக தொலைபேசியில் தெரிவித்தனர்.

பின்னர் விமானத்திலிருந்து அவர்களது பயணப்பொதிகள் இறக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டு மாலை 4.00 மணியளவிலேயே வெளியே செல்ல அனுமதித்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த இருவரும் லண்டனில் வசிக்கும் மகள் ஒருவரின் மகனது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காகச் செல்லவிருந்தனர். குறித்த நிகழ்வு எதிர்வரும் 11ம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You may like this video

Comments