மட்டக்களப்பு மேய்ச்சல்தரை பகுதியான மயிலத்தமடு மாதவணைப் பகுதியில் வைத்து நேற்று பிற்பகல் வேளையில் இனம் தெரியாத சிங்கள இனத்தவரின் தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் மாட்டுப் பண்ணையாளர் ஒருவர் இன்று காலை சந்திவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சித்தாண்டி பிரதேசத்தைச் சேர்ந்த மாட்டுப் பண்ணையாளரான இளையதம்பி தயானந்தன் (வயது 44) என்ற மூன்று பிள்ளைகளின் குடும்பஸ்தரே இத்தாக்குதலில் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது.
தாக்குதலுக்கு உள்ளாகிய நபர் நேற்று பிற்பகல் வேளை தனது மாடுகளுக்கு நீர் கொடுப்பதற்காக மயிலத்தமடு மந்திரி ஆற்றங்கரைக்கு கொண்டு சென்ற வேளையில் இனந்தெரியாத மூவர் மோட்டார் சைக்கிளில் வந்து, சிங்கள மொழியில் கதைத்து உரத்த தொனியில் விரட்டி கையில் இருந்த பெரியளவான தடியினால் தன்னைத் தாக்கியதாக தெரிவித்தார்.
தாக்குதல் நடந்தவேளை அடியின் பலத்தின் காரணமாக மயக்கமுற்ற நிலைக்குவர தன்னை தாக்கிய சிங்கள இனத்தைச் சேர்ந்த மூவரும் ஓடிச் சென்றதாகவும் அதன் பின்னர் எழுந்து தன்னுடைய வாடிக்காரர்களுக்கு கையடக்கத் தொலைபேசியில் இருந்து அழைப்பு எடுத்ததும் அவர்கள் வந்து தன்னை தூக்கிக் கொண்டு சென்றதாகவும் தாக்குதலுக்குள்ளான நபர் தெரிவித்தள்ளார்.
இனந்தெரியாத சிங்களவரின் தாக்குதலினால் முழங்கால், மற்றும் வயிற்றுப் பகுதி, உதடு பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்தனர்.
தாக்குதலை நடாத்திய இனந்தெரியாத சிங்களவர்கள் மூவரும் போதையில் இருந்ததாகவும், மோட்டார் சைக்கிளை ஒரு குறிப்பிட்ட தூத்தில் நிறுத்தி விட்டு வந்து தன்னைத் தாக்கியதாகவும் தெரிவித்தார்.
குறித்த சம்பவம் இடம்பெற்ற இடமானது எந்தவொரு வேளாண்மை மற்றும் பயிர்களோ இல்லாத பகுதிகள் ஆகும், நாளாந்தம் மாடுகள் மேய்ந்ததும் நீர் கொடுப்பதற்காக குறித்த ஆற்றங்கரைக்கு கொண்டு செல்வது வழமையாகவுள்ளதாக தெரிவித்தனர்.
நேற்று கிரான் பிரதேச விவசாய பிரிவுக்குப்பட்ட பெரும்போக ஆரம்ப கூட்டமானது நடைபெற்ற வேளையில் கூட்டத்தை நடாத்த விடாமல், முதலில் மயிலத்தமடு, மாதவணை மேய்ச்சல் தரைப் பண்ணையாளர்களின் பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுத் தரவேண்டுமென ஆர்ப்பாட்டம் நடாத்தியிருந்தமையும் கூட்டிக்காட்டத்தக்கது.
குறித்த பகுதியில் மேய்ச்சல் தரைப் பண்ணையாளர்கள் சிங்களவர்களினால் கடந்த காலங்களில் இருந்து சொல்லொண்ணா துன்பங்கள் அனுபவித்து வருவதாகவும், குறித்த விடயங்கள் தொடர்பாக பல்வேறுபட்ட தரப்பினரிடமும் முறையிட்டும் இதுவரைக்கும் எவ்வித முடிவுகளும் எட்டப்படவில்லை என விசனம் தெரிவிக்கின்றனர்.
கடந்த மாதங்களில் குறித்த பகுதியின் கள நிலவரத்தை அறிந்து கொள்வதற்காக நேரடியாக சென்ற மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட்ட குழுவினர் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் என பலர் சென்றிருந்த வேளையில் பல வாக்குறுதிகள் மற்றும் ஆலோசனைகள் அவ்விடத்தில் முன்வைத்து உடனடியாக செய்யப்பட வேண்டும் என கூறியிருந்தும் அனைத்தும் பொய்ப்பித்துப்போன நிலையில் தன்னுடைய உயிரையும் பணயம் வைத்து தன்னுடைய மாவட்ட எல்லையைத் தக்கவைத்து மாடுகளை மேய்த்து வாழ்வாதாரத்தை நடாத்திக்கொண்டிருக்கும் மயிலத்தமடு, மாதவணைப் பண்ணையாளர்களின் நிலை கேள்விக்குறியாகவே இருந்து வருகின்றமை உண்மையாகவுள்ளது எனலாம்.
இந்த வருடத்திற்குள் இரண்டாவது முறையாக சிங்கள இனத்தவரினால் மயிலத்தமடு, மாதவணை மேய்ச்சல் தரைப் பண்ணையாளர்கள் தாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.