இலங்கையில் பாலியல் கல்வி அவசியமானதா? பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர்களே பொக்கிஷங்களை தொலைத்துவிடாதீர்கள்!

Report Print S.P. Thas S.P. Thas in வாழ்க்கை முறை
326Shares

குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று சொல்வார்கள். அதனால் தான் குழந்தைகளை பார்த்தாலே மனம் ஆனந்தமடைகின்றது. கவலைகள் பறந்தோடுகின்றன.

ஆனால், இன்று அவர்களை கசக்கி எறியும் பெற்றோர்களும், சிதைத்து வீசும் காமுகர்களும் அதிகம் நடமாடும் தேசமாக மாறிவருவது வேதனையானது.

குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளை இன்று வெளியில் அனுப்புவதற்கே பயப்படுகின்றார்கள். இன்றைய சூழலில் பிள்ளைகள் சிதைக்கப்படுவதும் கொலை செய்யப்படுவதும் சர்வசாதாரணமாகியிருக்கின்றன.

குறிப்பாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு குழந்தைகளை தெருவிலும், காடுகளுக்குள்ளும், மணல்களுக்குள்ளும் புதைப்பவர்கள் யார் என்று, நோக்கின் அநேகமான சம்பவங்கள் பாதிக்கப்பட்ட குழந்தையின் உறவுக்காரர்களாகவே இருக்கின்றனர். இவற்றை வெளிவரும் காவல்த்துறை விசாரணைகளின் மூலமாக அறிந்து கொள்ள முடிகின்றது.

குழந்தைகளைப் பாதுகாப்பதில் பெற்றோர்களின் பங்கே முதன்மையானது. ஆனால் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தமக்குத் தெரிந்தவர்கள், அறிந்தவர்களிடம் ஒப்படைத்துவிட்டு, தங்கள் வேலைகளைக் கவனிப்பதற்கு சென்றுவிடுகின்றார்கள்.

இது தொடர்பில் குறை சொல்வதல்ல இந்த பத்தியின் நோக்கம். ஆனால், சிலவற்றை சித்தித்தாக வேண்டிய சூழல் நமக்கும் எதிர்காலப் பெற்றோர்களுக்கும், இன்றைய குழந்தைகளை வைத்திருப்போர்களுக்கும் உண்டு.

உண்மையில் இலங்கையில் பாலியல் கல்வி அவசியம் தானா? என்று நீண்டகாலமாக விவாதிக்கப்பட்டுவருகின்றது. ஆனால் இதற்கு பல தரப்பட்ட விமர்சனங்கள் மேலெழுந்து கொண்டு இருப்பதை அவதானிக்க முடிகின்றது.

ஒரு தரப்பு தேவை என்றும் இன்னொரு தரப்பு இலங்கை போன்ற நாடுகளுக்கு இது தேவையற்ற ஒன்று என்றும் வாதிடுகின்றார்கள்.

இந்த விமர்சனங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, சில ஆய்வுகளை மேற்கொள்வது இக்காலத்திற்கு தேவையானது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

பெரும்பால பாலியல் தொந்தரவுகளும், பலாத்காரங்களும் சில உறவுக்காரர்களாலும், சில வெளி நபர்களாலும் நடக்கின்றன.

தவறு நமது பிள்ளைகளிடத்தில் இல்லை. காரணம் அவர்கள் குழந்தைகள். ஏதும் அறியாக் குழந்தைகளை சிதைப்பவர்கள் பெரியவர்கள்.

இன்னும் சில இடங்களில் வயதான முதியவர்களும் இவ்வாறு குழந்தைகளை சிதைத்திருக்கிறார்கள். அது தொடர்பான செய்திகளையும் படித்துக் கொண்டிருக்கின்றோம்.

ஆனால், நமது குழந்தைகளுக்கும், சிறு பிள்ளைகளுக்கும் இந்த விடையம் தொடர்பில் ஏதேனும் அறிவை வழங்குகிறோமா என்றால் இல்லை.

பிள்ளைகளிடத்தில் இது பற்றிப் பேசுவதே இல்லை. பாலியல் என்ற வார்த்தை வந்தாலே அது தீண்டத்தகாத சொல். அதைப்பற்றி பேசக்கூடாது என்று நினைக்கும் நாம். அது தொடர்பாக பிள்ளைகளோடு உரையாடுவதில்லை.

குறிப்பாக குழந்தைகளிடத்தில் மனிதர்களின் நிலை பற்றியும். அவர்கள் எவ்வாறு செயற்படுவார்கள் என்பது குறித்தும் தெளிவாக பேசுவது அவசியமாகின்றது.

இதுகுறித்து இன்னும் விரிவாக கூறின், பிள்ளைகளிடத்தில் தொடுகைகள் பற்றியதான விழிப்பு அவசியமாகத் தேவைப்படுகின்றது.

ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக அணுகுவார்கள். பாசமாக பிள்ளையை தொடுபவர்களும் இருக்கிறார்கள். பிள்ளைகளை வேறு நோக்கம் கொண்டு தொடுபவர்களும் இருக்கிறார்கள்.

இதனால் தொடுகைகள் பற்றி பிள்ளைகளுக்கு குறிப்பிட்டு அவ்வாறான சந்தேகத்திற்கிடமாக யாராவது உங்களிடத்தில் அணுகினால் அவர்களிடத்தில் இருந்து விலகியிருப்பதும், அது தொடர்பில் பெற்றோர்களிடத்திலோ அன்றி அண்ணன், அக்காக்களிடத்திலோ குறிப்பிட வேண்டும் என்பதை பிள்ளைகளுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

இதேபோன்று தான், ஆண் பெண் வேறுபாடு பற்றியும், உணர்வுகள் பற்றியும் பிள்ளைகளுக்கு புரிதலை ஏற்படுத்த வேண்டும்.

ஆனால், இன்று பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடத்தில் இவை மறைத்து வைக்கப்பட வேண்டிய விடையங்கள் என்றும், அவற்றை அவர்களிடத்தில் பேசுவது சரியான முறையல்ல என்றும் கருதுகின்றார்கள்.

இது முற்றிலுமாக மாற வேண்டும். மேற்கத்தேய நாடுகளில் பிள்ளைகள் வளர்ந்து ஓரளவு வயதைத் தொட்ட பின்னர் அவர்களோடு சரிசமமாக இருந்து ஆண் பெண் பற்றிய புரிதல்கள், பருவ வயதுகளின் போது ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் பெற்றோர்கள் பேசுவார்கள்.

பாடசாலைகளிலும், கல்லூரிகளிலும் பாலியல் கல்வி முறைகளே இருக்கின்றன. ஆனால், நம்மவர்கள் இது குறித்து வாய் திறப்பதேயில்லை.

அன்பான பெற்றோர்களே, இன்று உலகம் நவீனத்தின் கையில் அகப்பட்டிருக்கிறது. நமது பிள்ளைகளின் கைகளில் நவீன தொலைபேசி சாதனங்கள் புகுந்து விளையாடுகின்றன.

எதையும் எந்த நேரத்திலும் விரும்பியதைப் பார்க்கலாம், அறியலாம் என்று இருக்கையில், பிள்ளைகளின் தவறான நினைப்புக்களையும், சிந்தனைகளையும் நீங்கள் நினைத்தால் மாற்றலாம்.

பிள்ளைகளை தவறாக வழி நடத்துபவர்களிடத்தில் இருந்து உங்கள் பிள்ளைகளை காப்பாற்றலாம். பாலியல் தொடர்பாக பேசுவது தவறல்ல.

ஆனால், பாலியல் ரீதியாக நமது பிள்ளைகளும், குழந்தைகளும் சிதைக்கப்படுவதை தினமும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். எனவே அவர்களை விழிப்படையச் செய்து, எங்கள் குழந்தைகள், பிள்ளைகள் கருகிப்போவதை நாமே தடுப்போம்.

கனவுகளோடு பெற்ற பிள்ளைகளின் வாழ்வு கருகிப்போக விடலாமா? பிள்ளைகளோடு கொஞ்சம் பேசுங்கள். இன்னும் கொஞ்சம் விரிவாகப் பேசுங்கள். தவறில்லை. நமது குழந்தைகள் தானே அவர்கள்.

Comments