ஜெயலலிதா அஞ்சலியில் இப்படியும் நேர்ந்த சோகம்!

Report Print Samy in வாழ்க்கை முறை
4043Shares

ராஜாஜி அரங்கில் ஜெயலலிதாவின் அஞ்சலி நிகழ்ச்சியின் போது 20 செல்போன்கள், 30 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்த இரண்டு பேரை போலீஸார் கைது செய்தனர்.

ஜெயலலிதா, கடந்த டிசம்பர் 5ம் தேதி காலமானார். பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் சென்னை ராஜாஜி அரங்கில் டிசம்பர் 6ம் தேதி வைக்கப்பட்டது.

மாலை 4.30 மணியவரை பொது மக்கள் அஞ்சலி செலுத்தினர். லட்சக்கணக்கான மக்கள் அங்கு திரண்டனர்.

இந்த கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பலரது செல்போன்கள், பணம் கொள்ளையடிக்கப்பட்டது. செல்போன்களைப் பறிக்கொடுத்தவர்கள் புலம்பினர்.

இது குறித்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாரிடமும் அவர்கள் தகவல் கொடுத்தனர்.

இந்த சமயத்தில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி ஒருவருடைய செல்போனை திருடும் போது பொதுமக்களிடம் திருடன் கையும் களவுமாக சிக்கினான்.

உடனடியாக பொது மக்கள் அவனை நன்றாக கவனித்து போலீஸிடம் ஒப்படைத்தனர்.

உடனடியாக திருவல்லிக்கேணி போலீஸார், அந்த நபரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

போலீஸ் விசாரணையில், செல்போனை திருட முயன்றது வேலூர் மாவட்டம், குடியாத்தத்தை சேர்ந்த சுரேஷ் என்பது தெரியவந்தது.

அவர் கொடுத்த தகவலின்படி அவரது கூட்டாளி தினேஷ்குமாரையும் போலீஸார் கைது செய்தனர்.

இவர்களிடமிருந்து 20 செல்போன்கள், 30 ஆயிரம் பணம் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில்,

கூட்டமாக இருக்கும் இடங்களுக்கு சென்று திருடுவதே இவர்களின் வேலை.

அதுபோலத்தான் ஜெயலலிதா அஞ்சலி நிகழ்ச்சியின் போதும் வேலூரிலிருந்து ஒரு கும்பல் வந்து கைவரிசை காட்டியுள்ளது.

ஜெயலலிதா இறந்த துக்கத்திலிருந்த தொண்டர்களிடமும், பொது மக்களிடமும் எளிதாக செல்போன், பணம் ஆகியவற்றை சுரேஷ், தினேஷ்குமார் திருடியுள்ளனர்.

சூளையை சேர்ந்த கௌரி கொடுத்த புகாரின் பேரில் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.

போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில்,

ஜெயலலிதாவின் அஞ்சலி நிகழ்ச்சியின் போது அருகில் நின்றவர்களிடம் அனுதாபமாக முதலில் பேசுவார்கள்.

அப்போது அவர்களும் சுரேஷ், தினேஷ்குமாருடன் ஜெயலலிதாவைப் பற்றி பேசும்போது அவர்களின் கவனத்தை திசை திருப்பி செல்போன், பணத்தை திருடி விட்டு அடுத்த இடத்துக்கு நைசாக சென்று விடுவார்கள்.

ஒரே நபரிடம் இரண்டு செல்போன்களை கூட இவர்கள் திருடி உள்ளனர். செல்போன், பணத்தை பறிகொடுத்தவர்களில் ஒருசிலர் மட்டுமே புகார் கொடுத்துள்ளனர்.

திருடப்பட்ட செல்போன்களில் 10க்கும் மேற்பட்டவைகள் விலை உயர்ந்தவைகள். திருடிய பணத்தில் பழைய 500, ஆயிரம் ரூபாய் தாள்களும் உள்ளன என்றனர்.

- Vikatan

Comments