யாழில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு

Report Print Suthanthiran Suthanthiran in வாழ்க்கை முறை

யாழ்.மாவட்டத்தில் கடந்த 24 நாட்களில் 428 பேர் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளான நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நந்தகுமார் தகவல் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினத்தில் மட்டும் 15 பேர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக உடுவில், யாழ்ப்பாணம், சாவகச்சேரி மற்றும் சண்டிலிப்பாய் போன்ற பகுதிகளில் இந்நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது என்றும், பொது மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.

பருவ மழைக்காலம் ஆரம்பித்துள்ள நிலையில் வழமை போன்று நுளம்பின் பெருக்கம் அதிகரித்துள்ளது. இதனால் டெங்கு நோயின் தாக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லுகின்றது.

குறிப்பாக இம்மாதம் 24 ஆம் திகதவரைக்கும் யாழ். மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளில் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகியிருக்கலாம் என்ற கணிப்பில் 428 பேர் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கான சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.

அதி வேகமாக பரவும் டெங்கு நுளம்பின் பெருக்கத்தை தடுக்கும் நடவடிக்கைகள் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையூடாக மேற்கொண்டு வருகின்ற போதிலும், பொது மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் நுளப்பு பெருக்கத்தை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாமல் உள்ளது.

பொறுப்பற்ற முறையில் யாழில் உள்ள அநேகமான இடங்களில் பிளாஸ்டிக் கழிவுப் பொருட்கள் வீசப்பட்டுள்ளன. குறிப்பாக ஜஸ்கிறிம் மற்றும் தண்ணீர் போத்தல்கள் பெருமளவு தேங்கி காணப்படுகின்றன.

மேலும் உக்கக் கூடிய கழிவுகள் கூட உரிய முறையில் அகற்றப்படாமல் தேங்கியுள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது.

இந்த விடையத்தில் பொது மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். அதாவது உக்கக் கூடிய கழிவுகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும்.

மேலும் பிளாஸ்திக் பொருட்களை மழை படாத இடத்தில் சேகரித்துவைத்து, அவற்றை யாழ்.மாநகர சபையிடம் ஒப்படைத்து மீள் சுழல்ச்சிக்காக அனுப்பிவைக்க வேண்டும்.

இனிவரும் காலங்களில் படிப்படியாக டெங்கு நோயின் தாக்கம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் பொது மக்கள் டெங்கு நுளம்பு பெருக்கத்தை தடுக்கும் நடவடிக்கையில் எம்மோடு இணைந்து செயற்பட வேண்டும்.

கடந்த 2016 ஆம் ஆண்டில் 2 ஆயிரத்து 319 பேர் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகியிருப்பார்கள் என்ற ரீதியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இவர்களில் ஆயிரத்து 713 பேருக்க டெங்கு நோய் தாக்கம் ஏற்பட்டிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இவற்றில் ஒருவர் உயரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments