பெண் அடிமைத்தனத்தை வேரறுக்க முனைந்த கதை

Report Print Aravinth in வாழ்க்கை முறை
25Shares

இன்று சர்வதேச மகளிர் தினம். பெண்களின் உரிமை தொடர்பில் உலகம் முழுவதும் விழிப்படைந்ததன் காரணமாக சர்வதேச மகளிர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

பெண்ணடிமைத்தனம் நம் நாட்டிலும் அண்டை நாடான பாரத பூமியிலும் வலிமையாக இருந்ததாயினும் பெண்களைத் தெய்வமாகப் போற்றும் மிக உயர்ந்த பண்பாடும் நமக்கே உரியதாயிற்று.

அதேவேளை கட்டிய கணவனைக் கண்கண்ட தெய்வமாகப் போற்றுவதும் பெற்ற பிள்ளைக்காக வாழ்வதுமே தன் பணி என்ற நினைப்போடு வாழும் தமிழ்ப் பெண்களின் அளவு கடந்த தியாகமே அவர்களைத் தெய்வமாகப் போற்றுமளவுக்கு உயர்த்தியது எனலாம்.

எதுவாயினும் நம் மத்தியில் இருந்த பெண்ணடிமைத்தனத்தை வேரறுக்க எழுந்தவன் புரட்சிக் கவிஞன் பாரதி.வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போம் என்ற விந்தை மனிதரை விரட்டி அடிக்கத் துணிந்த அந்தக் கவிஞனே பெண்கள் கல்வி கற்கவும் வேலை செய்யவும் வேண்டும் என்பதை வலியுறுத்தினான்.

பெண்ணடிமைத்தனத்தை உடைத்தெறிய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த பாரதி பெண்களின் கல்வித் தரத்தையும் வாண்மை விருத்தியையும் ஆளுமைத் திறத்தையும் அதிகரிக்கச் செய்வது கட்டாயம் என்பதிலும் விடாப்பிடியாக நின்றான்.

நிலத்தின் தன்மை பயிர்க்குளதாகுமாம். நீசத் தொண்டும் மடமையும் கொண்டதாய் தலத்தில் மாண்புயர் மக்களைப் பெற்றிடல் சாலவே அரிதாவதோர் செய்தியாம் என்ற பாரதி பாடிய பாடல் வரிகளின் பொருட் சிறப்பும் சொற் சிறப்பும் சாதாரணமானதல்ல.

கூடவே அதற்குள் விஞ்ஞானக்கருத்தும் செறிந்திருப்பதைக் காண முடியும்.அறிவுடைய; ஆளுமையுடைய; அச்சம் இல்லாத பெண்ணால் மட்டுமே இந்தப்பூமிக்கு மாண்புயர்ந்த மக்களைப் பெற்றுக் கொடுக்க முடியும் என்பது பாரதியின் முடிவு.

பெண் அடிமைத்தனம் நீங்க வேண்டும் என்று குரல் கொடுத்த பாரதி, அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பட்டியல்படுத்தி அதனை நடைமுறைப்படுத்துவதற்கும் வழி செய்கிறான்.

பெண்ணடிமைத்தனம் நீங்க வேண்டுமாயின் இந்தப் பாரினில் பட்டங்கள் ஆளவும் சட்டங்கள் செய்யவும் பெண்கள் தயாராக வேண்டும் என்றுரைத்ததோடு,இந்தப் பூமிக்கு பெறுமதியான பிள்ளைகளைப் பெற்றெடுக்கும் போதுதான் அந்தப் பிள்ளைகள் பெண்ணடிமைத்தனத்தை உடைத்து பெண்களுக்கு சம அந்தஸ்தை வழங்க முன்வருவர் என்பதையும் சொல்லி வைத்ததுதான் பாரதியின் சிறப்பு.

பாரதியின் இத்திட்டமிடலுக்கு மூல காரணம் பெண்ணடிமைத்தனத்தின் அடிப்படைக் காரணங்களை அவன் மிகவும் நுணுக்கமாக அறிந்து வைத்திருந்ததேயாகும்.

இன்று எங்கள் தமிழினம் படும் அல்லோலகல்லோலத்தைக் காண்கிறோம் அல்லவா?ஐ.நாவின் பரிந்துரைகளை அமுலாக்க இன்னமும் இரண்டு வருட அவகாசம் கொடுக்கலாம் என்று கூறுமளவுக்கு எங்களிடமே துரோகத்தனம் இருக்கிறது.

இத்தனை இழப்புக்களுக்குப் பின்னரும் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று பதவியில் இருக்கையிலும் தமிழினத்துக்குப் படுதுரோகம் செய்வார் மத்தியில்,அன்று பாரதி எத்துணை தீர்க்கதரிசனத்துடன் பெண்ணடிமைத்தனத்தை வேரறுக்க வியூகம் அமைத்தான் என்பதை நினைக்கும் போதெல்லாம் இதயம் நெகிழும்.ஆம், பாரதி கண்ட புதுமைப் பெண்கள் நம் மண்ணிலும் மலியட்டும். அப்போதுதான் பெண்களும் மிடுக்கோடு நம் உரிமைக்கு குரல் கொடுக்க முடியும்.

- Valampuri

Comments