சென்னை மென்பொறியாளர் சுவாதி கொலை வழக்கை முடித்து வைத்து விட்டது, எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம். 'கொலையில் குற்றம் சுமத்தப்பட்ட ராம்குமார் இறந்து விட்டதால், வழக்கை முடித்து வைப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அவர்தான் குற்றவாளி என உறுதி செய்யப்படாத நிலையில், வழக்கை எப்படி முடிவுக்குக் கொண்டு வர முடியும்?' எனக் கொதிக்கிறார், வழக்கறிஞர் ராமராஜ்.
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் 24-ம் தேதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார், 21 வயது மென்பொறியாளர் சுவாதி.
இந்தப் படுகொலை வழக்கில் செங்கோட்டை, மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பி.இ பட்டதாரி ராம்குமாரைக் கைது செய்தது போலீஸ்.
அதுவும், கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்தப் படுகொலைக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லை. கொலையாளிகளை மறைப்பதற்காக தவறுதலாக அவரைக் கைது செய்து விட்டது போலீஸ்.
அவர் எந்த உண்மையையும் பேசிவிடக் கூடாது என்பதற்காக, போலீஸாரே அவர் கழுத்தை அறுத்துவிட்டனர்' என ராம்குமார் தரப்பு வழக்கறிஞர்கள் குற்றம் சுமத்தினர்.
இந்த வழக்கில், சுவாதியின் நண்பர் பிலால் உள்பட பலரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தது காவல்துறை. வழக்கு தொடர்பான மர்மங்களும் வெளியானது.
ராம்குமார்தான் கொலையைச் செய்தாரா என்பது உறுதியாகாத நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 18-ம் தேதி புழல் சிறையில் மின் கம்பியைக் கடித்ததால் ராம்குமார் இறந்து விட்டார் என புழல் சிறை நிர்வாகம் அறிவித்தது.
இதுவும் மர்ம மரணமாகவே பார்க்கப்பட்டது. இந்நிலையில், சுவாதி கொலை வழக்கை முடித்து வைக்கக் கோரி, அரசுத் தரப்பில் நேற்று மனு தாக்கல்செய்யப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட குற்றவியல் நீதிமன்ற நடுவர், வழக்கை முடித்து வைத்தார். வழக்கறிஞர் ராமராஜ்ராம்குமாரின் வழக்கறிஞர் ராமராஜிடம் பேசினோம்.
சுவாதி கொலை வழக்கை எப்படி முடித்து வைத்தார்கள் என்பது குறித்த ஆவணங்களைச் சேகரித்து வருகிறோம். இன்னமும் ராம்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கையைக்கூட எங்களுக்குத் தரவில்லை. '
உங்களுக்குத் தரவேண்டிய அவசியம் என்ன?' என நீதித்துறையில் உள்ளவர்களே கேட்கிறார்கள்.
இந்த அளவுக்குத்தான், இந்த வழக்கைக் கையாண்டுள்ளனர். 'ஆள் வழக்கு ஆளுடன் முடியும்' என்பது குற்றவியல் வழக்குகளின் நியதி.
'சுவாதி கொலை வழக்கில், ராம்குமார்தான் குற்றவாளி' என்பது இன்னமும் உறுதி செய்யப்படவில்லை.பிறகு எப்படி வழக்கை முடித்து வைக்க முடியும்?
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என நீதிமன்றம் தீர்மானித்து விட்டது. அவர் இறந்து விட்டதால், அந்த வழக்கு அவரோடு முடிந்து விட்டது.
ஆனால், சுவாதி வழக்கு அப்படிப்பட்டது அல்ல. போலீஸாரின் புலன்விசாரணையில் ராம்குமார் குற்றவாளி என்பதை உறுதி செய்யும் வகையில், சாட்சிகளை முன்னிறுத்தியிருக்க வேண்டும்.
அந்த நேரத்தில் அவர் இறந்திருந்தால், அந்த வழக்கை முடிவுக்குக் கொண்டு வந்திருக்க முடியும்.இந்த வழக்கில் எந்த சாட்சிகளையும் போலீஸாரால் முன்னிறுத்த முடியவில்லை.
அவர் கைது செய்யப்பட்டதில் இருந்தே, இந்த வழக்குக்கும் ராம்குமாருக்கும் சம்பந்தம் இல்லை எனத் தொடர்ந்து கூறி வருகிறோம். இதற்காக, சிபிஐ விசாரணை கோரி தாக்கல்செய்த மனுவையும் தள்ளுபடி செய்து விட்டனர்.
ஆள் வழக்கு ஆளோடு முடியும்' என்பது இந்த வழக்குக்குப் பொருந்தாது. நீங்கள் யாரையாவது கொலைசெய்துவிட்டு, வேறு ஒரு நபர் மீது பழியைப் போட்டுவிட்டு, அவரையும் கொன்று விட்டால், வழக்கு முடிவுக்கு வந்து விட்டது என்று எப்படிச் சொல்ல முடியும்?
இந்திரா காந்தி படுகொலை வழக்கு நடந்தது. அவரைச் சுட்டவர்களையும் கொன்றார்கள்.ஆனால், 'வழக்கில் இன்னும் அடி வேர் வரையில் செல்ல வேண்டியுள்ளது' என மீண்டும் தூசி தட்டி எடுத்தார்கள். '
இறுதி அறிக்கை முடிவான அறிக்கை இல்லை' என்பதுதான் இந்திரா காந்தி வழக்குக்குச் சொல்லப்பட்ட காரணம்.
சுவாதி கொலையில் உண்மையான கொலையாளி யார்? ராம்குமார் எப்படி இறந்தார்?' என்பது இன்னமும் தெளிவுபடுத்தப்படவில்லை.
அனைத்து ஆவணங்களும் எங்கள் கைக்கு வந்த பிறகு, மத்திய புலனாய்வு அமைப்பின் விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருக்கிறோம்" என்றார் ஆதங்கத்துடன்.
'சுவாதி படுகொலைக்குப் பிறகே, ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டியதன் அவசியத்தை நீதியரசர்கள் கேள்வி எழுப்பினர்.
அதையொட்டி, அனைத்து பிளாட்பாரங்களிலும் சிசிடிவி கேமராக்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.
ஆனால், சுவாதி கொலைக்கான பின்புலத்தைக் கண்காணித்து, உறுதியான அறிக்கை அளிப்பதற்குத்தான் ஒருவரும் இல்லை' என ஆதங்கப்படுகின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள்.
- Vikatan