தாய், மாமன் விடுதலையை எதிர்த்து மேன்முறையீடு செய்வேன்! கௌசல்யா

Report Print Samy in வாழ்க்கை முறை

எல்லா வகையிலும் இந்தத் தீர்ப்பை வரவேற்கிறேன். குற்றத்துக்கு உடந்தையாக இருந்த அன்னலட்சுமி, பாண்டித்துரை, பிரசன்னாவின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்வேன். அவர்களுக்கும் தண்டனை கிடைக்கும் வரை போராடுவேன். அதுவரை என் சட்டப் போராட்டம் தொடரும் என உடுமலை சங்கர் படுகொலை வழக்கில் தீர்ப்பு வெளியானதும், தீர்க்கமான குரலில் இதைத் தெரிவித்தார்,

சாதிக்கு எதிரான போராட்டங்களை வாழ்வியலாக்கிக் கொண்டிருக்கும் கௌசல்யா சங்கர். நேசித்துத் திருமணம் செய்துகொண்ட சங்கரை, தனது பெற்றோரும், உற்றோருமே சேர்ந்து கொலை செய்வார்கள் என அவர் நினைக்கவில்லை.

சாதியை மீறிய திருமணம், அதன் காரணமாக எழுந்த வெறியின் உச்சம்தான் சங்கரின் படுகொலை. கௌசல்யாவின் உடலில் ஏற்படுத்தப்பட்ட காயங்களைக் காலம் ஆற்றியிருக்கிறது. கண்முன்னே சங்கரை இழந்த வலி, கௌசல்யாவை நேர்மறையான துணிச்சலான ஆளுமையாக மாற்றியிருக்கிறது.

சாதி வன்முறைகள் குறித்துப் பேசும், உரையாடும் எந்த முற்போக்கு இயக்கத்தின் மேடையிலும், தவிர்க்க முடியாத நபராக மாறியிருக்கிறார் கௌசல்யா. சிசிடிவி காட்சிகளைப் பார்த்தவர்கள் பதறிய அந்தப் படுகொலை வழக்கின் தீர்ப்பு, தமிழகமே எதிர்பார்த்த ஒன்று. மனிதநேயம் கொஞ்சம் இருப்பவர்களும், கடுமையான தண்டனைக்காக காத்திருந்திருப்பார்கள்.

சமீப காலங்களில் பல ஆணவக்கொலை வழக்குகளை கடந்திருக்கிறது. கவனம் பெற்ற சில சம்பவங்களும், கவனம் பெறாத பல சம்பவங்களும் உச்சுக்கொட்டுதலோடு கடந்துசெல்லப்பட்டன.

ஆணவக்கொலை வழக்கு ஒன்றில், குற்றத்தில் ஈடுபட்ட பெரும்பான்மையானவர்களுக்குத் தூக்குத்தண்டனை அளிக்கப்பட்டிருப்பது இதுவே முதன்முறை.

இதற்கு முன்பாக, கர்ப்பிணிப் பெண் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் நெல்லையைச் சேர்ந்த தலையாரி சங்கர நாராயணன்- செல்லம்மாள் தம்பதிக்கு தூக்கு தண்டனை விதித்தது நெல்லை நீதிமன்றம்.

மரண தண்டனை குறித்த எனது கருத்து வேறாக இருந்தாலும், வழங்கப்பட்டிருக்கும் இந்தத் தீர்ப்பு சாதி ஆணவக் கொலைகளைச் செய்பவர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்’ என்று தெரிவித்திருந்தார் கௌசல்யா.

இதுமட்டுமல்லாமல், சாதி மறுப்புத் திருமணம் செய்பவர்களை, காவல்துறையே கட்டப்பஞ்சாயத்து செய்து அவரவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, சாதி ஆணவக் கொலைகளுக்கு எதிரான தனிச்சட்டத்தை இயற்றவும் வலியுறுத்தி வருகிறார்.

சாதியைத் துறக்கும்போதும், மறுக்கும்போதும் ஒருவர் எவ்வளவு தன்மதிப்போடும், பொது நலத்தோடும் வெளிப்படுவார் என்பதற்கு உதாரணமாய் நின்றுவிட்ட கௌசல்யா குறித்து சமூகவலைதளங்களில் பலவிதமான உரையாடல்கள் எழுந்தன.

கௌசல்யாவின் மன உறுதியைப் பாராட்டியும், சங்கருக்கு உகந்த நீதி கிடைத்ததாகவும் மகிழ்ச்சிப் பதிவுகள் ஒருபுறமிருக்க, சாதி இறுக்கத்தையும், ஆணவத்தையும் எதிர்த்து நிற்பதற்காக கௌசல்யாவை இகழ்ந்தும், சபித்தும் கொச்சைப்படுத்தியும் இழிவான பல பதிவுகளை எழுதித்தள்ளினார்கள் சாதிப் பற்றாளர்கள்.

2012 டிசம்பரில் டெல்லியில் கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார் நிர்பயா. நிர்பயாவுக்காக கொதித்தெழுந்து எழுதிய, மெழுகுவத்தி தூக்கி நடந்த பலரின் டைம்லைன்காரர்கள்கூட, கௌசல்யாவை தூற்றிக்கொண்டிருந்தனர்.

நீதிகூட, இவர்களது சாதியை தீண்டாமல் இருந்தால்தான் நீதி என்ற வகையில் இருந்தது அவர்களின் பதிவுகள்.

தூக்குதண்டனை வழங்கப்பட்ட கௌசல்யாவின் தந்தை வீரமரணம் அடையப்போகிறவர்’ என்றும், ’தன்னையே தியாகம் செய்து கெளரவத்தை நிலைநாட்டியவர்’ என்றும் போடப்பட்ட பதிவுகளும், மீம்ஸ்களும், 'இப்படிப்பட்ட சாதி மனநோயாளிகளுடன்தான் நாமெல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்' என்ற உண்மையை உணர்த்தி அச்சத்தை அளிக்கிறது.

சங்கர் கொலை வழக்கில், மொத்தம் 8 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. சின்னச்சாமியின் குடும்பத்தை, உறவினர்களை பாதிக்கப்பட்டவர்களாக உருவகப்படுத்தி சோக ஸ்டேட்டஸ் போட்டுக்கொண்டிருக்கிறார்கள் சாதிப்பற்றாளர்கள்.

கஷ்டப்பட்டு பெத்து, தூக்கி வளர்த்தவர்களுக்கு...’ என ஆரம்பித்து, உலகத்தின் படுமோசமான வார்த்தைகளால் கௌசல்யா மீது வெறுப்பை உமிழ்கிறார்கள் இவர்கள்.

ஒரு குறிப்பிட்ட சாதியை முன்வைக்கும் ’ஃபேஸ்புக் பக்கம் ஒன்று, சின்னச்சாமி, அவரது மனைவி அன்னலட்சுமி ஆகிய இருவரும் சிரித்துக்கொண்டே சேர்ந்து நிற்கும் படத்தை, ப்ரொஃபைல் போட்டோவாக வைத்து மரியாதை செய்திருக்கிறது! -

நீங்க செத்தாலும் எங்களுடைய குலம் காத்த குல தெய்வமாக ஆவீர்கள்’ என்பதுதான் ப்ரொஃபைல் படத்தின் கேப்ஷன். கௌசல்யா தனது நண்பர்களுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களைப் பதிவிட்டு, சாக்கடை வார்த்தைகளால் கௌசல்யா ஒழுக்கத்தை நகையாடுகின்றனர்.

இப்படிப்பட்ட பதிவுகளே இவர்கள் எவ்வளவு மோசமான சாதிவெறியர்கள் என்பதும் ஆணாதிக்கவாதிகள் என்பதையும் காட்டுகின்றன.

இவர்கள் கையில் நவீன சாதனமான ஸ்மார்ட் போன்கள் இருக்கலாம், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற நவீன சமூக ஊடகங்களை இவர்கள் பயன்படுத்தலாம். ஆனால், மனதளவில் இவர்கள் நவீனத்துக்குச் சம்பந்தமில்லாத பழமைவாதிகளாகவே இருக்கின்றனர்.

பட்டப்பகலில் ஒரு பேருந்து நிலையத்தின் அருகில் நடந்த கொலையையும், அந்தக் கொலையாளிகளையும் நியாயப்படுத்தும் அளவுக்குத் தூண்டுகிறது என்றால், சாதிவெறி எவ்வளவு மோசமான விஷயம் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

உண்மையில் கொலைகளை ஆதரிக்கும் இவர்களின் பதிவுகளின் அடிப்படையிலேயே இவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்.

தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு மட்டும் உணர்ச்சி வசப்படாமல், இனி சாதியின் பெயரால், ஒருவரது இரத்தம் சிந்திவிடக்கூடாது என்று போராடி நீதி பெற்றிருக்கிறார் கௌசல்யா.

மிகக் கவனமாக பாதுகாக்கப்படவேண்டியவர் அவர். சாதியைத் துறந்து வெளிவருபவர்கள் விடுதலை பெற்று மிளிர முடியும் என்பதைப் பார்க்க வேண்டுமா? - கௌசல்யாவைப் பார்க்கலாம்.

வெறுப்பின் வார்த்தைகளைக் கடந்து முன்செல்லுங்கள் கௌசல்யா!

- Vikatan