பெற்றோல் கலந்த மண்ணெண்ணெயை ஊற்றி தீ மூட்டியவருக்கு நேர்ந்த கதி!

Report Print Samy in வாழ்க்கை முறை

பெற்றோல் கலக்கப்பட்டிருந்த மண்ணெண்ணையை அடுப்பில் விட்டுத் தீ மூட்டியவர் எரிகாயங்களுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்த துயரச் சம்பவமொன்று யாழில் இடம்பெற்றது.

சுதுமலை தெற்கு மானிப்பாயைச் சேர்ந்த ஆறுமுகம் துரைராஜா (வயது – 59) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

இவர், கடந்த 5ம் திகதி கடைக்குச் சென்று முன்னர் பெற்றோல் வாங்கிய போத்தலுக்குள் மண்ணெண்ணெய் வாங்கி வந்துள்ளார்.

அந்தப் போத்தலுக்குள் முன்னர் வாங்கிய பெற்றோல் சிறிதளவு இருந்ததை அவரோ, கடைக்காரரோ கவனிக்கவில்லை.

இந்த நிலையிலேயே அவர் வாங்கி வந்த மண்ணெண்ணையை அடுப்பில் ஊற்றி தீயை பற்ற வைத்த போது உடல் முழுதும் தீ பற்றி விட்டது. அவர் அலறியபடி தண்ணீர்த் தொட்டியில் ஓடிச்சென்று குதித்துள்ளார்.

அந்த நேரம் சந்தைக்குச் சென்றிருந்த அவரது மனைவியும் வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார். அத்துடன் அவரின் சத்தத்தைக் கேட்ட அயலவர்களும் ஓடி வந்துள்ளனர்.

உடனடியாக அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பயனளிக்காது நேற்றுக்காலை உயிரிழந்தார்.

விசாரணைகளின் பின்னர் எரிகாயத்தால் ஏற்பட்ட மரணம் எனக் கூறி சடலம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.