பேரறிவாளன் சிறைக்குள் அடைபட்டு 27 வருடங்கள் நிறைவு!

Report Print Samy in வாழ்க்கை முறை

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக, பேரறிவாளன் சிறையில் அடைக்கப்பட்டு ஜூன் 11ம் தேதியான நேற்றுடன், 27 வருடங்கள் பூர்த்தியாகின்றன.

அவர் வெளியில் வாழ்ந்ததை விட சிறைக்குள் தான் 8 வருடங்கள் கூடுதலாக வாழ்ந்துள்ளார் என்பது பெரும் சோகம்.

இளமை கனவுகளோடு வாழ்ந்த 19வது வயதில் கைது செய்யப்பட்ட பேரறிவாளனுக்கு இப்போது 46 வயது. ஏறத்தாழ மனிதனின் சராசரி ஆயுள் காலத்தில் பாதிக்கும் மேற்பட்ட பருவத்திற்கு வந்து விட்டார்.

ராஜிவ் கொலை வழக்கு தொடர்பாக,1991ம் ஆண்டு ஜூன் 11ம் தேதி பேரறிவாளன் கைது செய்யப்பட்டார்.

உண்மையை சொல்ல வேண்டுமானால், சிறு விசாரணையாகத் தான் இருக்கும், மறுநாளே திருப்பியனுப்பிவிடுவார்கள் என்று நினைத்து, பேரறிவாளனை அவரது பெற்றோரே போலீசில் ஒப்படைத்திருந்தனர்.

ஆனால் நாளை வருவார் என நம்பி பெற்றோர் அனுப்பிய நபர் 27 வருடங்களாக (பரோல் காலத்தை தவிர்த்து) சிறைக்குள்தான் அடைபட்டு கிடக்கிறார்.

ராஜிவ் கொலை வழக்கை சிபிஐ விசாரித்தது. ஒரே நாள் விசாரணையில் பேரறிவாளனை திரும்ப அனுப்புவோம் என்று தான் சிபிஐயின் சில அதிகாரிகள் அவர் பெற்றோரிடம் கூறியிருந்தனர்.

ஆனால், விசாரணை ஆரம்பித்த அடுத்த 59 நாட்களாக பேரறிவாளன் எங்கே இருக்கிறார் என்பது கூட தெரியாமல் மர்மமாக மறைக்கப்பட்டது.

பேரறிவாளனின் மற்றொரு பெயர் அறிவு. அப்படிச் சொன்னால் தான் அவரது உறவுக்கார வட்டாரத்தில் தெரிகிறது. 59 நாட்ளாக அறிவு எங்கே இருந்தார் என்பதே தெரியாத நிலையிலும், போலீஸ் மீதான பயத்தால் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்யாமல் இருந்தோம் என்கிறார் பேரறிவாளன் உறவுக்காரர் ஒருவர்.

பேரறிவாளன் குற்றமற்றவர் என்பதால் அதை நிரூபிக்க பெரிய கஷ்டம் இருக்கப் போவதில்லை, எப்படியும் விடுதலையாகி வெளியே வருவார் என்பதே அவரது பெற்றோர் நம்பிக்கையாக இருந்தது.

27 வருடங்களுக்கு பிறகும், பேரறிவாளன் தாயார் அதே நம்பிக்கையில் தான் இருக்கிறார். நிரபராதி தண்டிக்கப்பட்டு விடக் கூடாது என்ற இந்திய சட்டத்தின் மீது அவருக்கு அபார நம்பிக்கை.

அனைத்து கதவுகளையும் தட்டி பேரறிவாளன் நிரபராதி என நிரூபிக்க தேவையான முயற்சிகளை செய்தனர். இன்னமும் செய்து கொண்டே தான் இருக்கின்றனர்.

இத்தனை சிறைவாசத்திற்கும் காரணம் 9 வோல்ட் பற்றரியை பேரறிவாளன் வாங்கியது தானாம். இது பெட்டிக்கடைகளில் கூட கிடைக்கக் கூடிய பற்றரி தான். ஆனால், இந்த பற்றரியை பயன்படுத்தி தான், ராஜிவ் கொலையாளிகள் குண்டு தயாரித்தனர் என்கிறது சிபிஐ.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், பேரறிவாளன்தான் தனது கடையில் பற்றரி வாங்கினார் என சம்பவம் நடந்து பல மாதங்களுக்கு பிறகு பெட்டிக்கடைக்காரர் ஞாபகம் வைத்துக்கொண்டு வாக்குமூலம் அளித்தது தான்.

அதுமட்டுமல்ல ஆச்சரியம். பற்றரி வாங்கியதாக கூறப்பட்ட நாளுக்கு பல மாதங்களுக்கு பிறகு அதற்கான ரசீது பேரறிவாளன் சட்டைப் பையில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாக சிபிஐ கூறியது தான்.

மேலும் ஒரு ஆதாரமாக, தான்தான் பற்றரி வாங்கினேன் அதை ராஜிவ் கொலையாளி என கூறப்படும் சிவராசனிடம் கொடுத்தேன் என பேரறிவாளன் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதும் சிபிஐயால் கோர்ட்டில் முன் வைக்கப்பட்டது.

இவரது வாக்குமூலம் அடிப்படையில் தான் பேரறிவாளனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

ஆனால் கடந்த வருடம் அக்டோபர் 27ம் தேததி முன்னாள் சிபிஐ அதிகாரி வி.தியாகராஜன் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.

அதில், பேரறிவாளன் வாக்குமூலத்தை தான்தான் பதிவு செய்ததாகவும், ஆனால், பற்றரி வாங்கியது தான்தான் என்றும், அது எதற்காக பயன்படுத்தப்பட போகிறது என்பது தனக்கு தெரியாது என்றும் பேரறிவாளன் கூறியவற்றை மட்டும் கோர்ட் கவனத்திற்கு கொண்டு வரவில்லை என்றும் பரபரப்பு தகவலை தெரிவித்தார்.

மேலும், 1991ம் ஆண்டு மே 7ம் தேதி விடுதலைப் புலிகள் இயக்க முன்னணி தலைவரான பொட்டு அம்மானுடன் சிவராசன் பேசிய வயர்லெஸ் உரையாடலை இடைமறித்து கேட்ட போது, தனக்கும் (சிவராசன்), சுபா மற்றும் தனு ஆகியவருக்கும் மட்டுமே நமது நோக்கம் தெரியும் என கூறியதாகவும், இதை வைத்து பார்க்கும் போது பேரறிவாளனுக்கு ஏன் பற்றரி வாங்கி வரச் சொன்னார்கள் என்பதே தெரியாது என்பது உறுதிப்படுவதாகவும் தியாகராஜன் குறிப்பிட்டார்.

பேரறிவாளன் வாக்குமூலத்தை மட்டுமே அடிப்படையாக வைத்துதான் 27 வருடங்களாக அவர் சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ளார் என்பது இதன் மூலம் தெரியவருகிறது.

வாக்குமூலம் போலீசாரால் எப்படி பெறப்படும், அதிலும் இப்படி ஒரு முக்கிய வழக்கில் எப்படி பெறப்பட்டிருக்கும் என்பது உலகறிந்த விஷயம்தானே என்கிறார்கள் சட்டத்துறையில் உள்ளவர்கள்.

வெற்று காகிதத்தில் பேரறிவாளனிடம் கையெழுத்து வாங்கி அதில் இஷ்டத்திற்கு எழுதி, வாக்குமூலமாக சமர்ப்பித்ததாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.

27 வருட சிறை வாசத்தில், 23 ஆண்டுகள் அவர் மரண தண்டனை கைதியாக இருந்தார் (2014ல் உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக மாற்றியது). அப்போது பல முறை தூக்கிற்கு நாள் குறிக்கப்பட்டு நிறுத்தப்பட்டது.

பல மோசமான உளவியல், உடலியல் பிரச்சினைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், பேரறிவாளனின் புன்முறுவலை யாராலும் பறிக்க முடியவில்லை.

சிறைக்குள் இருந்தபடி 7வது தேர்வு எழுதிய பேரறிவாளன் 91.33 சதவீத மதிப்பெண் பெற்று தேர்வானார். தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழக தேர்வில் தங்க பதக்கம் வென்றுள்ளார் பேரறிவாளன்.

பெயருக்கேற்ற அறிவு அவருக்குள் இருப்பதை இவை உணர்த்துகின்றன. எம்சிஏ படிப்பையும் விடவில்லை பேரறிவாளன்.

இதுமட்டுமா, சிறைக்குள் உள்ள சக கைதிகளுக்கு டியூசன் சொல்லி கொடுக்கிறார். சக கைதிகளுடன் சிறைக்குள் இசைக் குழுவை ஏற்படுத்தி பிறரை மகிழ்வித்து வருகிறார்.

இவரது நற்பழக்கங்களால் ஈர்க்கப்பட்ட முன்னாள் கைதி பொன்னப்பன் என்பவர் இப்போது காஞ்சியில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு கல்வி அறக்கட்டளையே நடத்தி வருகிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

தனது 46 வயது மகன் வாழ்க்கையில் ஒரு நல்லது நடந்து விடாதா என்று தமிழ் பெண்களுக்கே உள்ள தீரத்தோடு சட்டப் போராட்டத்தை நடத்தி வருகிறார் 71 வயதாகும் தாய் அற்புதம்மாள்.

இன்று பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என்பது தமிழகத்தில் ஒரு மக்கள் இயக்கமாக மாறியுள்ளது.

சிபிஐ விசாரித்த வழக்கு என்பதால் மாநில அரசுக்கு அவரை விடுதலை செய்ய அதிகாரம் இல்லை. மத்திய அரசின் கையில் பந்து உள்ளது.

அரசியல் காரணங்களுக்காக பேரறிவாளன் விடுதலை தள்ளிப்போகிறது. இதற்கு விடிவுகாலம் எப்போது?

- One India