தீவக கிணறுகளுக்குள் மறைந்திருக்கும் மர்மங்கள்! விஜயகலா அதிர்ச்சித் தகவல்

Report Print Suthanthiran Suthanthiran in வாழ்க்கை

யாழ்ப்பாணம் - தீவகத்தில் மூடப்பட்டுள்ள பல கிணறுகளை நீதிமன்ற அனுமதியுடன் தோண்டினால் காணாமல் போன பலர் தொடர்பான தேடல்களுக்கு, விடை கிடைக்கும் என சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வேலணை பிரதேச செயலகத்தில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க செயலணியினால், ஞானம் அறக்கட்டளை நிதியத்தின் நிதி உதவியோடு பொது மக்களுக்காக அமைத்துக் கொடுக்கப்பட்ட மழைநீர் சேகரிப்பு தாங்கி கையளிக்கும் நிகழ்வு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் பங்கேற்புடன் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பங்கேற்று கருத்து வெளியிடும் போதே இராஜங்க அமைச்சர் இவ்வாறு கூறினார்.

கடந்த கால ஆட்சிகளின் போது தீவகப் பகுதிகள் ஆயுதக்குழுவொன்றின் ஆக்கிரமிப்பிலேயே இருந்தன. அதனால் தீவக மக்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் எந்த உதவிகளையும் செய்ய முடியாதிருந்தது.

அக்காலப்பகுதிகளில் குறித்த அந்த ஆயுதக் குழுவை மீறி அங்கு செல்பவர்கள் திரும்பி உயிருடன் வரமாட்டார்கள் என்ற நிலை இருந்தது. இவ்வாறான ஒரு அடக்கு முறைக்குள் இருந்து நல்லாட்சி அரசாங்கத்தினால் இன்று தீவகம் விடுவிக்கப்பட்டுள்ளது எனவும் விஜயகலா தெரிவித்தார்.

தீவகத்தில் இன்று பல கிணறுகள் மூடப்பட்டுள்ளன. இவ்வாறான கிணறுகளை நீதிமன்றத்தின் அனுமதி பெற்று தோண்டுவோமானால் பல உண்மைகள் வெளியில்வரும். குறிப்பாக காணாமல் போனவர்கள் பலருக்கு என்ன நடந்தது? என்ற உண்மை வெளிப்படும் எனவும் அவர் கூறினார்.

Comments