மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும்

Report Print Sethu Sethu in வாழ்க்கை

மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் கடந்த 1990.09.09 அன்று இடம்பெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணையே வேண்டுமென பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பிரதேசத்தில் 1990.09.09. அன்று நடைபெற்ற இனப்படுகொலை நினைவு நாள் நிகழ்வு நாளை நடைபெறவுள்ள நிலையில், அது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாதிக்கப்பட்ட மக்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்..

அவர்கள் மேலும் கூறுகையில்

26 வருடங்களாக எமது கிராமத்தில் நடைபெற்ற இந்த இனப்படுகொலைக்கு நீதி கிடைக்கவில்லை. எமது உறவுகள் படுகொலை செய்த காரணத்தையும் அதற்கு காரணமானவர்கள் கண்டறியப்பட்டிருந்தும், அது குறித்து கடந்த 26 ஆண்டுகளாக இலங்கையில் இருந்த எந்த அரசாங்கங்களும் விசாரணைகளை நடாத்தி, குற்றவாளிகளை தண்டிக்கவில்லை.

எனவே இனிமேலாவது இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் தங்களுக்கான நீதி பெற்றுத்தரப்பட வேண்டும். நாங்கள் தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்தை நம்புவதற்கு தயாராக இல்லை.

நிலைமாறு கால நீதிப்பொறிமுறைக்கு ஊடாக தங்களுக்கு சர்வதேச நீதிபதிகளைக் கொண்ட ஒரு சிறப்பு நீதிமன்றம் ஊடாக ஏற்கனவே கண்டறியப்பட்ட உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணை ஒன்றை ஆரம்பித்து, குற்றவாளிகளுக்கு தண்டனை வேண்டிக் கொடுப்பதுடன், இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடுகளையும் வழங்க வேண்டுமென சம்பந்தப்பட்டவர்களிடம் வேண்டுகோள் விடுப்பதாக பாதிக்கப்பட்ட உறவுகள் தெரிவித்தனர்.

09.09.2016ம் அன்று வெள்ளிக்கிழமை சத்துருக்கொண்டான் படுகொலையின் 26வது ஆண்டு நினைவஞ்சலி நடைபெறவுள்ள நிலையில், அந்த அஞ்சலி நிகழ்வில் தாங்கள் இந்தப் படுகொலைகளுக்கான சர்வதேச விசாரணையை கோரவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

09-09-1990 அன்று சத்துருக்கொண்டான் போய்ஸ்டவுன் முகாமிற்கு கொண்டு சென்று படுகொலை செய்யப்பட்டவர்களில் தங்களது உறவுகள் 18 பேர் அடங்குவதாக சத்துருக்கொண்டானில் உள்ள கதிர்காமத்தம்பி தம்பிஐயா கூறுகின்றார்.

தனது பிள்ளைகள் உட்பட மாமா, மாமி, மச்சான், அண்ணன் தம்பி என மொத்தமாக 18 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் சத்துருக்கொண்டானை சேர்ந்த சின்னத்தம்பி சின்னப்பிள்ளையின் குடும்ப சொந்தங்கள் 35 பேரும் இதில் படுகொலை செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

சத்துருக்கொண்டானைச் சேர்ந்த குழந்தைவடிவேல் என்பவர் கூறும்போது, தனது அம்மா, அப்பா, தங்கச்சி, அக்கா, அக்காவின் குழந்தைகள் மூன்று பேர் அம்மம்மா, அம்மப்பா, தம்பி, அண்ணன் என மொத்தமாக 10 பேர் படுகொலை செய்யப்பட்டதாக மிகுந்த மனவேதனையுடன் தெரிவித்தார்.

சத்துருக்கொண்டானில் உள்ள ஜெயானந்தி என்பவர் கூறும் போது, இந்த சம்பவத்தில் தனது அம்மா, அப்பா, தங்கச்சி ஆகிய மூவரும் படுகொலை செய்யப்பட்டதாக கூறினார்.

கொக்குவில் சந்தியில் உள்ள ஜோச் சுகந்தினி என்பவர் கூறும்போது இந்தச் சம்பவத்தில் தனது அம்மா, தங்கச்சி அம்மம்மா ஆகிய மூவரையும் கூட்டிச்சென்று இராணுவத்தினர் படுகொலை செய்துள்ளதாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

Latest Offers

loading...

Comments