வடக்கில் ஆர்வத்துடன் இரத்த தானம் வழங்கிய இளைஞர், யுவதிகள்

Report Print Thamilin Tholan in வாழ்க்கை

வடபிராந்திய சத்திய சாயி சர்வதேச நிறுவனம் வருடாந்தம் நடாத்தி வரும் இரத்ததான முகாம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) காலை-08.30 மணி முதல் பிற்பகல்- 01.30 மணி வரை யாழ். திருநெல்வேலியில் அமைந்துள்ள சத்திய சாயி சேவா நிலைய மண்டபத்தில் வடபிராந்திய சத்திய சாயி சர்வதேச நிறுவனத்தின் தலைவர் கே.வி.சிவனேசன் தலைமையில் இடம்பெற்றது.

"தெய்வம் கொடுத்ததைத் தெய்வத்துக்கே கொடுத்து உயிரைக் காப்பாற்றி ஆரோக்கியத்தை வளர்ப்போம்" எனும் தொனிப் பொருளில் இடம்பெற்ற இந்த மாபெரும் இரத்ததான முகாமில் யாழ். போதனா வைத்தியசாலையின் நடமாடும் இரத்த வங்கிப் பிரிவினர் நேரடியாக கலந்து கொண்டு இரத்தம் பெற்றுக் கொண்டனர்.

இந்தக் இரத்த நன்கொடை முகாமில் சத்திய சாயி நிலையங்களைச் சேர்ந்தவர்களும், ஆர்வலர்களும் என 41 வரையானவர்கள் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கினர். இவ்வாறு இரத்தம் வழங்கியவர்களில் பெரும்பாலானோர் இளைஞர், யுவதிகள் என்பதும், அவர்கள் ஆர்வத்துடன் இரத்த தானம் வழங்க முன்வந்தமையும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

குறித்த இரத்த தான நிகழ்வு தொடர்பில் வடபிராந்திய சத்திய சாயி சர்வதேச நிறுவனத்தின் உபதலைவரும், வைத்தியருமான எஸ். சிவகோணேசன் கருத்துத் தெரிவிக்கையில்,

பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபாவின் அறிவுறுத்தலுக்கமைய வருடம் தோறும் செப்டெம்பர் மாதத்தில் இரத்ததான நிகழ்வு அகில உலக ரீதியிலுள்ள சத்தியசாயி நிலையங்களில் இடம்பெற்று வருகிறது. 1987 ஆம் ஆண்டிலிருந்து யாழ்ப்பாணம் பகவான் ஸ்ரீ சத்திய சாயி சேவா நிலையத்தில் இரத்த தான நிகழ்வு இடம்பெற்று வருகிறது. அந்த வகையில் 2016 ஆம் ஆண்டுக்கான இரத்த தான நிகழ்வு இன்று (நேற்று) இடம்பெறுகிறது.

பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபா அன்புக்கும், சேவைக்கும் மிகவும் முக்கியத்துவம் வழங்குபவர். அந்த வகையில் இரத்த தானமானது 'அன்புத் திரவத்தினுடைய பகிர்வு' எனும் வகையில் அனைவரையும் இரத்த தானம் செய்யுமாறு கூறுகின்றார்.

இரத்தம் தேவைப்படுவோரின் தொகை அதிகமாகவுள்ள நிலையில் இரத்தம் வழங்குவோரின் எண்ணிக்கை போதுமானதாகக் காணப்படவில்லை. இவ்வாறான நிலையில் சாயி நிலையங்களைச் சேர்ந்த அன்பர்கள் இரத்த தானம் வழங்க முன்வர வேண்டும் எனும் நல்ல நோக்கத்துடன் இந்த இரத்த தான நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளோம் என்றார்.

Latest Offers

loading...

Comments