131 இலங்கையர்களுடன் அவுஸ்திரேலியா சென்ற கப்பல் மலேசியாவில் இடைமறிப்பு

Report Print Ajith Ajith in மலேசியா

அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்துக்கு இலங்கையர்களான சட்டவிரோத குடியேறிகளை கடத்திச் சென்ற கப்பலொன்று மலேசிய பொலிஸாரால் இடைமறிக்கப்பட்டுள்ளது.

அதிலிருந்த 131 இலங்கையர்கள் மலேசிய பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த கப்பல் கடந்த முதலாம் திகதி இடைமறிக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

‘எட்ரா’ (ETRA) எனப் பெயரிடப்பட்டுள்ள அந்தக் கப்பல் 98 ஆண்கள், 24 பெண்கள் மற்றும் நான்கு சிறுவன் மற்றும் ஐந்து சிறுமிகள் என 131 இலங்கையர்களை ஏற்றிச் சென்றதாக அந்நாட்டு அதிகாரிகள் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 இந்தோனேசியர்கள் மற்றும் 4 மலேசியர்களும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கடத்தலுடன் தொடர்புடைய ஐந்து மலேசியர்களையும் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இந்தக் கைது நடவடிக்கை மூலம் ஒரு பாரிய மனித கடத்தலை ரோயல் மலேசிய பொலிஸார் வெற்றிகரமாக தோல்வியடையச் செய்துள்ளதாக பொலிஸ் பிரதானி மொஹமட் ஹருன் தெரிவித்துள்ளார்.

2017 நடுப்பகுதியிலிருந்து இயக்கப்படும் இந்த நடவடிக்கையுடன் இலங்கை, அவுஸ்திரேலியா,நியூஸிலாந்து, இந்தோனேசியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்கிடையில் சர்வதேச தொடர்புகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.