புலிகளை பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் இருந்து நீக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனு நிராகரிப்பு

Report Print Steephen Steephen in மலேசியா

செயற்பாட்டில் இல்லாத தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மலேசியாவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் இருந்து நீக்குமாறு கோரி வாடகை கார் சாரதி ஒருவர் தாக்கல் செய்த மனுவை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

வி.பாலமுருகன் என்பவர் தாக்கல் செய்த இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி மரியான யஹ்யா கோரிக்கையை நிராகரித்து தீர்ப்பளித்துள்ளார்.

பாலமுருகன் ஏற்கனவே விடுதலைப்புலிகளுடன் தொடர்பு இருப்பதாக கூறி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும், அவருக்கு நீதித்துறையின் மீளாய்வுடன் தொடர்புடைய மனுவை தாக்கல் செய்ய உரிமையோ இயலுமையோ இல்லை எனவும் நீதிபதி கூறியுள்ளார்.

பாலமுருகன் மலேசிய உள்துறை அமைச்சு மற்றும் அரசாங்கத்தை பிரதிவாதிகளாக குறிப்பிட்டு இந்த மீளாய்வு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

வழக்கு செலவு தொடர்பான உத்தரவுகள் எதுவுமின்றி நீதிமன்றம் மீளாய்வு மறுவை நிராகரித்துள்ளதாக மனுதாரரின் சட்டத்தரணி ஒமர் குட்டி தெரிவித்துள்ளார்.

மீளாய்வு மனுவை தாக்கல் செய்ய தாமதமாகியுள்ளதாக கூறியுள்ள நீதிபதி, 2014ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய மூன்று மாதங்களுக்குள் அந்த மனு தாக்கல் செய்யப்பட வேண்டும் எனவும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்றம் வழங்கியுள்ள இந்த தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீட்டு செய்யப்படுமா என்பது குறித்து கருத்து வெளியிட்டுள்ள மனுதாரின் சட்டத்தரணி, தீர்ப்புக்கான முழு காரணத்தையும் ஆராய்ந்து, மேன்முறையீடு செய்யப்படுமா இல்லையா என்பது தீர்மானிக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

பயங்கரவாத அமைப்புகள் சம்பந்தமான வர்த்தமானி அறிவித்தலில் உள்ள தகவல்களுக்கு அமைய விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் சேர்த்திருப்பது சட்டவிரோதமானது என உத்தரவிடக் கோரி, பாலமுருகன் கடந்த ஜனவரி 8ஆம் திகதி இந்த மீளாய்வு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

விடுதலைப் புலிகளுடன் தொடர்புள்ளவர்கள் என கடந்தாண்டு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 12 நபர்களில் பாலமுருகனும் ஒருவர்.

எவ்வாறாயினும் இந்த 12 பேருக்கு எதிரான பயங்கரவாத குற்றச்சாட்டை முன்னாள் சட்டமா அதிபர் டொமி தோமஸ் கடந்த பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி இடைநிறுத்தினார்.

இதனையடுத்து விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் இருந்து முற்றாக விடுதலை செய்யப்பட்ட பாலமுருகன், விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத பட்டியலில் இருந்து நீக்குவதற்கான சட்டப் போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க போவதாக கூறியிருந்தார்.

எனினும் அன்றைய மலேசிய உள்துறை அமைச்சரும், தற்போதைய பிரதமருமான டான்ஸ்ரீ முஹைதீன் யாசின், மலேசிய உள்துறை அமைச்சின் பதிவேடுகளில் விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்ந்தும் பயங்கரவாத அமைப்புகளில் ஒன்றாக இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.