போரின் போது தழும்புகள் ஏற்பட்டு விட்டதா? அதை நீக்க ஓர் வாய்ப்பு!

Report Print Suthanthiran Suthanthiran in மருத்துவம்
92Shares

வட மாகாணத்தில் போரினால் காயமடைந்து தழும்புகளுடன் வாழ்ந்த 30 பேருக்கு இலவச பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் சுமார் 250 பேர் சத்திர சிகிச்சைகளுக்காக பதிவு செய்துள்ள நிலையில், அவர்களுக்காக சத்திர சிகிச்சை மிக விரைவாக மேற்கொள்ளப்படும் என வைத்திய கலாநிதி லயன் திருமதி அமுதா கோபாலன் கூறியுள்ளார்.

சர்வதேச லயன்ஸ் கழகத்தில் 100ம் ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி மனிதநேய சேவையாக வடக்கில் போரினால் காயமடைந்த நிலையில் தழும்புகளுடன் வாழ்ந்த கொண்டிருக்கும் மக்களுக்கு மறுவாழ்வை வழங்கும் வகையில் இலவச சத்திர சிகிச்சை சேவை யாழ்.தெல்லிப்பளை வைத்தியசாலையில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய 8ம், 9ம், 10ம் திகதி ஆகிய 3 தினங்களில் இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

மேற்படி விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே, சத்திர சிகிச்சையை ஒழுங்கமைத்த வைத்திய கலாநிதி லயன் திருமதி அமுதா கோபாலன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,

பலர் எங்களிடம் வந்து தங்கள் பெயர்களையும் பதிவு செய்யுங்கள் என கேட்கிறார்கள். அவ்வாறு எமக்கு 250 வரையான பதிவுகளை செய்திருக்கின்றோம். ஆனாலும் சுமார் 30 பேருக்கு மட்டுமே சிகிச்சை வழங்க கூடியதாக இருந்தது.

எனவே மிகுதி அனைவருக்கும் மிக விரைவாக சிகிச்சை வழங்கப்படும். அதற்காக போரினால் உண்டான காயங்களின் தழும்புகளை அகற்றுவதில் புகழ் பெற்ற வைத்தியர்களை இங்கே கொண்டுவருவதற்கு நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றோம்.

தற்போது சிகிச்சைகளை அமெரிக்க மற்றும் இந்திய மருத்துவர் குழு மேற்கொண்டிருந்தது. பாதிக்கப்பட்ட பெருமளவானவர்கள் தமது அவயங்களில் தழும்புகளுடனும், ஊனத்துடனும் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு உதவுவதை முழு நோக்கமாக கொண்டு குறித்த குழுவினர் யாழ்.மாவட்டத்துக்கு வருகைதந்து சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளது.

தமது முகங்கள் அலங்கோலமாக இருப்பதால் பலர் சமூகத்தின் முன் வெளிவராமல் ஒளிந்து உள்ளார்கள். இது அவர்களுக்கு பாரிய மனத்தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை நாம் அறிகிறோம்.

எனவே அவர்களை புது மனிதர்களாக வெளி உலகத்துக்கு காண்பிப்பதுடன் அவர்கள் சாதாரண வாழ்க்கை வாழ்வதற்கு இது நல்ல சந்தர்ப்பமாக அமைகிறது என்றார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் ஆரம்பமாகியுள்ள குறித்த வைத்திய குழுவின் பணிகள், இன்றுடன் முடிவடைகின்றது.

இந்த நிலையில் இதுவரை ஐம்பது பேர் சிகிச்சைக்காக பதிவு செய்திருந்ததாகவும் அதில் முப்பது பேருக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு, அவர்கள் உடனடியாகவே வீடு திரும்பும் நிலையில் காணப்படுகின்றது.

குறிப்பாக போரில் முகத்தில் தழும்புகள் ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதாக மருத்துவ குழு அறிவித்திருந்த போதிலும் முதல் கட்டமாக வாய்ப்பகுதியில் தழும்புகள் காயங்கள் ஏற்பட்டவர்களுக்கே பிளாஸ்டிக் சத்திர சிகிச்சையை மேற்கொண்டுள்ளது. இதில் அநேகமானவர்கள் பெண்கள் மற்றும் சிறுவர்களாகவும் உள்ளனர்.

இங்கு அதிகாமானவர்கள் இவ்வாறான பாதிப்புடன் காணப்படுகின்றனர். எனினும் எமது காலப்பகுதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளதனால் குறைந்தளவானோர்க்கே சிகிச்சை மேற்கொள்ள முடிந்தது.

எனினும் அடுத்த வருடம் ஜனவரி மாதமளவில் மற்றுமொரு குழு இலங்கை வரக்கூடியதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளன.

அப்போது அனைத்து விதமான முக தழும்புகளையும் சரிசெய்யும் சிகிச்சைகளை அவர்கள் மேற்கொள்வார்கள் என அந்த குழு தெரிவித்தது.

இதேவேளை குறித்த சிகிச்சை தொடர்பில் அறிந்திராத சிறுவர்கள் உட்பட பலர் நேற்றைய தினம் வைத்தியசாலைக்கு வந்திருந்த போதிலும் அவர்கள் முற்பதிவு செய்திராத காரணத்தினால் சிகிச்சை மேற்கொள்ளப்படவில்லை.

இந்த சிகிச்சையை தவறவிட்டவர்கள் தொடர்பில் ஏற்பாட்டாளர்கள் கவனம் செலுத்த வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

குறித்த சத்திர சிகிச்சையை செய்வதற்கு 2 நாட்களுக்கு முன்னர் ஒரு பரிசோதனை மேற்கொள்ள வேண்டியுள்ள காரணத்தால் முன்னரே எம்முடன் தொடர்பு கொண்டு ஆலோசனைகளை பெற வேண்டும்.

எனவே குறித்த சிகிச்சையை மேற்கொள்ள விரும்புபவர்கள் தெல்லிப்பளை வைத்தியசாலையில் தமது பதிவுகளை செய்து கொள்ள முடியும்.

அத்துடன் 0718186185 என்ற தொலைபேசி இலக்கத்துடனும் தொடர்பு கொண்டு பதிவுகளை மேற்கொள்ள முடியும் என முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments