சந்தேகத்திற்கு இடமான கொடுக்கல் வாங்கல்கள்! இரகசிய அறிக்கை வழங்குமாறு உத்தரவு

Report Print Kamel Kamel in பணம்

சந்தேகத்திற்கிடமான வகையில் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடும் வாடிக்கையாளர்கள் தொடர்பில் இரகசிய அறிக்கை ஒன்றை வழங்குமாறு நிதி நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்திய வங்கிக்கு இவ்வாறான அறிக்கை வழங்கப்பட வேண்டுமென நிதி அமைச்சினால் உத்தரவிடப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்கு இடமான கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வு பிரிவிற்கு இரகசிய அறிக்கை வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 21ம் திகதி வெளியிடப்பட்ட அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

2006ம் ஆண்டு 6ம் இலக்க நிதிக் கொடுக்கல் வாங்கல் சட்டத்தின் பிரகாரம் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்கு இடமான கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடும் வாடிக்கையாளர்களின் விபரங்களை இரகசியமாக நிதி நிறுவனங்கள், வங்கிகள், காப்புறுதி நிறுவனங்கள் உள்ளிட்டன வழங்க வேண்டுமென கோரப்பட்டுள்ளது.

குடும்ப உறுப்பினர்களைக் கொண்டு கணக்குகளை பேணுதல், திடீரென பாரியளவில் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுதல், எவ்வித வர்த்தக நோக்கமும் இன்றி கணக்குகளை பேணுதல், அசாதாரண கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுதல் போன்ற காரணிகளின் அடிப்படையில் நிதி நிறுவனங்கள் மத்திய வங்கிக்கு அறிக்கை சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.