புதிய நடைமுறையால் வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு பாதிப்பா?

Report Print Vethu Vethu in பணம்

இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய வரிச் சட்டம் தொடர்பில் அமைச்சர் மங்கள சமரவீர விளக்கம் அளித்துள்ளார்.

புதிய வரி சட்டத்தின் கீழ் வெளிநாட்டில் பணி புரியம் இலங்கையர்களிடமும் வரி அறவிடப்படும் என நேற்றைய தினம் செய்தி வெளியாகியிருந்தது.

எனினும் இதுவொரு போலியான தகவல் என அமைச்சர் மறுப்பு தெரிவித்துள்ளார். புதிய சட்டத்திற்கமைய வெளிநாட்டில் உள்ள இலங்கை பணியாளர்களிடம் வரி அறவிடப்படுவதாக கூறப்படுவதில் உண்மையில்லை.

அத்துடன் ஓய்வு பெற்றவர்களிடம் வரி அறவிடப்படுவதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாக வெளியான செய்தியையும் அமைச்சர் மறுத்துள்ளார்.

நிதி அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களினால் உள்நாட்டு வங்கிகளில் வைப்புச் செய்யும் பணத்திற்கு 5 வீத வரி அறவீடு செய்யப்பட உள்ளது.

(வங்கியில் வைப்பு செய்யப்படும் பணத்திற்கு கிடைக்கும் வட்டி பணத்திற்கே 5 வீத வரி அறவீடு செய்யப்பட உள்ளது. உதாரணமாக வங்கியில் 10 லட்சம் ரூபாய் வைப்பு செய்யும் போது அதற்கு ஒரு லட்சம் ரூபா வட்டி கிடைக்குமாக இருந்தால், அந்த ஒரு லட்சத்திற்கே 5 வீத வரி அறவீடு செய்யப்படும்)

எனினும், வெளிநாட்டில் பணி புரிவோர் தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கும் பணத்திற்கு வரி அறவீடு செய்யப்பட மாட்டாது.

சிரேஸ்ட பிரஜைகளின் 15 லட்சம் வரையிலான வைப்புக்களுக்கான வட்டிகளுக்கு வரி விலக்கு அளிக்கப்படுவதுடன் அதற்கு மேலதிகமாக தொகைக்கு 5 வீத வரி அறவீடு செய்யப்பட உள்ளது என நேற்று செய்தி வெளியாகி இருந்தது.