சம்பந்தன், விஜயகலா ஆகியோருக்கு பல கோடி ரூபா பெறுமதியான அதிசொகுசு வாகனம்!

Report Print Ajith Ajith in வாகனம்

ஏழு அமைச்சர்கள், மூன்று இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர் ஒருவர் ஆகியோருக்கு வாகனங்களை கொள்வனவு செய்வதற்காக 49 கோடியே 49 இலட்சத்து 62 ஆயிரத்து 790 ரூபா நிதி கோரி குறைநிரப்பு பிரேரணையொன்றை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

ஆளும்தரப்பு பிரதம கொறடாவும் பாராளுமன்ற அலுவல்கள் மற்றும் ஊடகத்துறை அமைச்சருமான கயந்த கருணாதிலகவே இந்த குறைநிரப்பு பிரேரணையை நேற்று சபையில் சமர்ப்பித்துள்ளார்.

இதில் எதிர்க்கட்சித் தலைவருக்காக வாகனமொன்றை கொள்வனவு செய்வதற்காக 3,74,73,540 ரூபாவும் இந்த குறைநிரப்பு பிரேரணையின் மூலம் கோரப்பட்டுள்ளது.

விசேட செயற்திட்டங்கள் அமைச்சருக்கு வாகனமொன்றை கொள்வனவு செய்வதற்காக 4,26,00,000 ரூபாவும், தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சருக்கு வாகனமொன்றை கொள்வனவு செய்வதற்காக 4,20,00,000 ரூபாவும் நிதி கோரப்பட்டுள்ளது.

மேலும், நீர்பாசனம் மற்றும் நீர்வளங்கள் முகாமைத்துவம் அமைச்சருக்கும் இராஜாங்க அமைச்சருக்கும் வாகனமொன்றை கொள்வனவு செய்வதற்காக 8,60,00,000 ரூபாவையும் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சருக்காக வாகனமொன்றை கொள்வனவு செய்வதற்காக 4,10,00,000 ரூபாவும், சுற்றுலாத்துறை கிறிஸ்தவ மத விவகாரங்கள் அமைச்சருக்காக வாகனமொன்றை கொள்வனவு செய்வதற்காக 4,30,00,000 ரூபாவும் கோரப்பட்டுள்ளது.

அத்துடன், உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சருக்காக வாகனமொன்றை கொள்வனவு செய்வதற்காக 4,30,00,000 ரூபாவும் நிலைபேறு அபிவிருத்தி மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சருக்கு வாகனமொன்றை கொள்வனவு செய்வதற்காக 4,30,00,000 ரூபாவும் தேவையென்று மேற்படி குறைநிரப்பு பிரேரணையில் கோரப்பட்டுள்ளது.

அத்துடன், மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சருக்கு வாகனமொன்றை கொள்வனவு செய்வதற்காக 4,25,48,000 ரூபாவும், விஞ்ஞான தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி இராஜாங்க அமைச்சருக்கு வாகனமொன்றை கொள்வனவு செய்வதற்காக 4,30,00,000 ரூபாவும், தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சருக்கு வாகனமொன்றை கொள்வனவு செய்வதற்காக 3,13,41,250 ரூபாவும் குறித்த குறைநிரப்பு பிரேரணை மூலம் கோரப்பட்டுள்ளது.

சமகால அரசாங்கத்தின் எதிர்க்கட்சித் தலைவராக இரா.சம்பந்தன் செயற்படும் அதேவேளை, மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக விஜயகலா மகேஸ்வரன் பணியாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments