புதிதாக மோட்டார் வாகனங்களை பதிவு செய்வோரின் கவனத்திற்கு

Report Print Mubarak in வாகனம்

புதிதாக பதிவுகளை மேற்கொள்ளும் மோட்டார் வாகனங்களுக்காக, புதிய எழுத்துகள் மற்றும் இலக்கங்களுடனான இலக்கத் தகடுகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அந்த வகையில் CBA 0001 என்று ஆரம்பிக்கப்படும் இலக்கத் தகடுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

CAA 0001 என்ற வாகனப் பதிவு இலக்கங்கள், கடந்த 2013ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் அறிமுகப்படுத்தப்பட்டன. CA என்று ஆரம்பிக்கப்பட்ட எழுத்துகள் ஆங்கில அகராதியின் 26 எழுத்துகளையும் உள்ளடக்கி CAA 0001 முதல் CAZ 9999 வரையான இலக்கங்களில் வாகனப் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த இலக்கத் தொகுதியின் கீழ் 246,000 வாகனங்கள் கடந்த நான்கரை வருடகாலப் பகுதியில் பதிவாகியுள்ளன.

இதே​வேளை, கடந்த 2016ஆம் ஆண்டுடன் ஒப்பிடுமிடத்து 2017ஆம் ஆண்டில் முச்சக்கர வண்டிகளுக்கான பதிவு குறைவடைந்துள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையாளர் ஜகத் சந்திரசிறி,

கடந்த வருடத்தில் முச்சக்கர வண்டிகளின் பதிவு 50 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதெனக் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் பொதுப் போக்குவரத்துச் சேவையாகிய பேருந்துகளுக்கான பதிவுகள் கடந்த வருடத்தில் அதிகரிக்கப்பட்டுள்ளதென்றும் அவர் குறிப்பிட்டார்.

2016இல் 56,945 முச்சக்கர வண்டிகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் 2017இல் 23,395 ​முச்சக்கர வண்டிகளே பதிவுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனவென்றும் அவர் குறிப்பிட்டார்.

2017ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாகனங்களின் எண்ணிக்கை, 4 இலட்சத்து 48 ஆயிரத்து 625 ஆகும். இப்பதிவு, கடந்த 2016ஆம் ஆண்டில், 493,328ஆகக் காணப்பட்டதெனவும், ஆணையாளர் குறிப்பிட்டார்.

அத்துடன் கடந்த வருடத்தில் மோட்டார் சைக்கிள் பதிவுகள் அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. 2016ஆம் ஆண்டுடன் ஒப்பிடுமிடத்து, 2017இல் 617 பேருந்துகள் மேலதிகமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும் எதிர்வரும் நாட்களில் 1,000 குதிரை வலுவுக்குக் குறைந்த வாகனங்களுக்காக, இறக்குமதித் தீர்வை நிவாரணம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில் 2018ஆம் ஆண்டில் சிறிய வாகனங்களுக்கான பதிவுகள் அதிகரிக்கும் வாய்ப்பு காணப்படுவதாக ஆணையாளர் மேலும் குறிப்பிட்டார்.