இராணுவ பயிற்சி நடவடிக்கை காரணமாக மாதுருஓயா காட்டுக்கும் அங்கு வாழ் விலங்கினங்களுக்கும் பாரியளவில் பாதிப்பு ஏற்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தப் பாதிப்புக்கள் குறித்து உடனடியாக அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் நிலையான அபிவிருத்தி அமைச்சர் காமினி ஜயவிக்ரம, வனவிலங்குப் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளிடம் கோரியுள்ளார்.
மாதுருஓயா தேசிய வனவிலங்கு சரணாலயத்தில் இரண்டு இராணுவ முகாம்கள் காணப்படுகின்றன.
படையினருக்கு காடுகளில் சண்டை பயிற்சி வழங்கும் நோக்கில் இரண்டு முகாம்களும் நிறுவப்பட்டுள்ளன.
தேசிய வனவிலங்கு சரணாலயத்திற்குள் இராணுவ முகாம் அமைப்பது மற்றும் இராணுவ பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொள்வது வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டத்திற்குப் புறம்பானது என சுற்றாடல் பாதுகாப்பு சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த நாட்களில் சில இராணுவ தரப்பினர் தொடர்சியாக மாதுருஓயா வனவிலங்கு சரணாலயத்தில் பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இராணுவத்தினர் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வனவிலங்குப் பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோருக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயற்பட்டு வருவாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இராணுவப் பயிற்சி மற்றும் துப்பாக்கி வேட்டு சத்தம் காரணமாக வனவிலங்குகள் பீதியடைந்துள்ளன.
பீதியடைந்த யானைகள் கிராமங்களுக்குள் பிரவேசிப்பதனால் மனித யானை மோதல்கள் அதிகரித்துள்ளன. இவ்வாறு கிராமத்திற்குள் பிரவேசித்த யானையொன்று நபர் ஒருவரை கொன்றுள்ளது.
படை அதிகாரிகள் காட்டுக்குள் தற்காலிக கூடாரங்களை அமைத்து தீ முட்டுவது, காடு தீப்பற்றுவதற்கு காரணமாக அமைந்துள்ளது.
ஏற்கனவே பல நூறு ஏக்கர் காணிகள் இவ்வாறு அழிவடைந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இராணுவத்தினரின் இந்த நடவடிக்கை குறித்து பாதுகாப்பு அமைச்சு இதுவரையில் எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை.