இயற்கை அன்னையே உன் இதயம் நெகிழவில்லையோ

Report Print Samy in இயற்கை
2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் நாள் எவரும் எதிர்பாராத அந்தப் பேரழிவு நடந்து முடிந்தது.

சுனாமி எனும் ஆழிப்பேரலை மனித உறவுகளை காவுகொண்ட நாள் அது. அமைதியாக; அடக்கமாக இருந்த கடல் அன்னை ஏனோ தெரியவில்லை, பெரும் கோபம் கொண்டவளாக எவராலும் கட்டுப்படுத்த முடி யாத பேரலையாக எழுந்து மனித உறவுகளை தனக்கு ஆகுதியாக்கினாள்.

இன்று 12 ஆண்டுகள் நிறைவாகிவிட்ட ஆழிப்பேரலை, எழுந்தது ஒருகணம் ஆயினும் இன்றுவரை அந்த அழிவின் வேதனை கண்ணீராய் கரைந்து ஓடுகிறது.

ஏன்தான் இப்படி என்ற வேதனையின் மத்தியில் இயற்கையை இறைவனாக வணங்கி வழிபட்ட எங்கள் ஆதிச் சமூகத்தின் பண்பாடுபற்றி நாம் சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.

ஆதிகாலத்து மனிதன் சூரியனை, சந்திரனை, நதியை, ஆற்றை, சமுத்திரத்தை, மண்ணை, மரத்தை, ஆகாய வெளியை, வாயுவை கடவுளாகப் போற்றி வணங்கினான்.

இயற்கையே நமக்கான வாழ்வு என்பதை நம் மூதாதையர்கள் முழுமையாக நம்பியிருந்தனர். அதிலும் குறிப்பாக தமிழ்ச் சமூகம் இயற்கையை வழிபடுவதில் அதீத கவனம் செலுத்தியது.

சூரியனை வழிபாடு செய்ய சூரியப் பொங்கல் செய்யப்பட்டது. வாயுவை வழிபாடு செய்தல், சந்திரனை வணங்குதல், மரத்தை, கடலை வழிபாடு செய்வது என்பது எங்கள் வழிபாட்டு மரபாக அமைந்திருந்தது.

பிதிர்க்கடன் தீர்த்தல் என்ற அபரக்கிரியை நீர்நிலைகளிலேயே இடம்பெற்றன. இவ்வாறாக இயற்கையை கடவுளாக வழிபட்டவர்கள், இயற்கையை பாதுகாப்பதிலும் அதனை பேணுவதிலும் ஆர்வம் காட்டினர்.

இருந்தும் விஞ்ஞான தொழில்நுட்ப முன்னேற்றங்களும் அணுவாயுதப் பரிசோதனைகளும் இறைவன் தந்த இயற்கையை பதம் பார்ப்பனவாக மாறின.

இதன் விளைவாக கடல் அன்னை சீற்றம் கொண்டாள். அந்தச் சீற்றத்தால் ஏதும் அறியாத அப்பாவிகள் பலியாகிப் போயினர். அந்தக் கொடூரம் நடந்து இன்று 12ஆண்டுகள் நிறைவாகின்றன.

ஆழிப்பேரலையில் உயிரிழந்த அத்தனை உறவுகளுக்குமாக நாம் அனைவரும் ஒருகணம் அஞ்சலி செலுத்துவோம். அதேவேளை இறைவனாக நாம் வழிபட்ட இயற்கையை போற்றிப் பாதுகாக்க திட சங்கற்பம் கொள்வோம்.

இயற்கை என்பது நம் வாழ்வுக்கு இறைவன் தந்த இருப்பிடம். அந்த இருப்பிடத்தில் இருந்து கொண்டு அதனைச் சேதப்படுத்துவதும், அதனைக் கோபப்படுத்துவதுமான செயல்கள் நடந்தேறுகின்றன.

இதனால் இயற்கை அனர்த்தம் என்பது அடிக்கடி ஏற்படலாயிற்று. இத்தகைய அனர்த்தங்கள் அனைத்தும் மனித வாழ்வை சிதைப்பதாகவும் மனித சமூகத்துக்கு தீரத்துன்பத்தை தருவதாகவும் அமைவதைக் காண முடிகின்றது.

எனவே நாம் வாழும் இயற்கையை பராமரிக்க தவறுவோமாயின் அதன் ஒவ்வொரு கட்டத்திலும் பாரிய சவால்களை நாம் எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.

ஆகையால் இயற்கையைப் பாதுகாப்போம் என அத்தனை பேரும் ஒற்றுமையாக ஒருங்கிணைந்து சத்தியம் செய்வோம். அந்தச் சத்தியத்தை வழுவாது காண்பிப்போம்.

இந்த உறுதி ஆழிப்பேரலை நடந்த 12ஆண்டுகள் நிறைவடைகின்ற இன்றைய நாளில் எடுத்துக் கொள்வோம்.

இந்த உறுதி ஆழிப்பேரலையில் ஆகுதியான எங்கள் உறவுகளுக்கான மிகப்பெரும் காணிக்கையாக இருக்கும்.

- Valampuri

Comments