இலங்கை வந்த போது ஆச்சரியப்பட்டு போனேன்!! தமிழ்நாட்டின் விவசாய வல்லுநர்

Report Print Suman Suman in இயற்கை

நான் இலங்கை வந்தபோது இங்குள்ள நீர் வளத்தினைக் கண்டு ஆச்சரியப்பட்டு போனேன் என தமிழ்நாட்டின் இயற்கை விவசாய வல்லுநர் எஸ்.பாமயன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி - அக்கராயன் மகா வித்தியாலத்தில் நடைபெற்ற இயற்கை விவசாயம் தொடர்பான பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

நான் இலங்கை வந்தபோது இங்குள்ள நீர் வளத்தினைக் கண்டு ஆச்சரியப்பட்டு போனேன். தமிழ்நாட்டிலே தூய்மையான நீருக்காக நாள்தோறும் நாம் போராடிக் கொண்டிருக்கின்றோம்.

இலங்கையிலே குறைந்தது நூறு அடியில் ஆழ்துளைக் கிணறுகளை அமைத்து நீரினைப் பெற்றுக் கொள்ளலாம். தமிழ் நாட்டிலே பல கிராமங்களிலே 1000 அடிக்கு மேல் ஆழ்துளைக் கிணறுகளை அமைத்துத்தான் நீரினைப் பெற்றுக் கொள்ள வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது.

குடிநீருக்காக மக்கள் நீண்ட தூரம் அலைந்து கொண்டிருக்கின்றனர். தொடக்க காலங்களில் தமிழ் நாட்டில் பல கிராமங்களில் நல்ல நீரினைப் பெற்றுக் கொள்ளக் கூடிய நிலைமை இருந்தது.

ஆனால் நீரினை தேவையற்ற முறையில் பயன்படுத்தி பயிர்ச் செய்கைகளை மேற்கொண்டு பயிர்ச் செய்கை கூட சூழலுக்கு ஒவ்வாத வகையில இரசாயனப் பாவனைகளினால் மண்ணும், நீரும் தன்மைகளில் இருந்து மாறுபடக் கூடிய நிலைமையினை உருவாக்கி விட்டது.

எப்போதும் விவசாயிகள் குளங்களில் இருந்து பயிர்ச் செய்கைக்கு நீரினை தாருங்கள் என்றுதான் போராடுவார்கள். ஆனால் தமிழ் நாட்டின் பல கிராமங்களில் குளங்களில் இரசாயனம் கலந்து இருப்பதன் காரணமாகவே நீரினைத் திறந்து விட வேண்டாம் என்று விவசாயிகள் போராடுகின்றனர்.

அந்தளவிற்கு தமிழ் நாட்டில் மண் மற்றும் நீரினது தன்மைகள் மாறி விட்டன. எமது முன்னோர்களின் இயற்கை விவசாயத்தில் இருந்து நாம் எங்கோயோ சென்று இரசாயனம் கலந்த செயற்கை விவசாயத்தினால் அழிவுகளுக்குள் சிக்குண்டுள்ளோம்.

தற்போது எமக்குத் தேவைப்படுவது எல்லாம் இயற்கை விவசாயம்தான். எமது உணவுடன், நீருடன் இரசாயனம் கலப்பதன் காரணமாகவே பல நோய்கள் உருவாகின்றன.

பிறக்கின்ற குழந்தைகள் கூட நோய்களுடனும், குறைபாடுகளுடனும் பிறப்பதற்குக் காரணமே நாம் உண்ணும் உணவும், நீருமே காரணமாக அமைகின்றது.

எனவே இயற்கை விவசாயத்தின் அறிவையும், அவசியத்தினையும் எல்லோரும் விளங்கிக் கொண்டு செயற்பாட்டில் இறங்க வேண்டும்.

எமது முன்னோர்களின் விவசாய முறைகள் இயற்கை விவசாயம் சார்ந்ததாகவே அமைந்திருப்பதன் காரணமாக அதன் அறிவுகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

செயற்கை விவசாயத்தில் இருந்து விடுபடுவதன் மூலமே மண்ணையும், நீரினையும் பாதுகாத்துக் கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.