இலங்கையில் தொடரும் சீரற்ற காலநிலை! 6 பேர் பலி - வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த எச்சரிக்கை

Report Print Vethu Vethu in இயற்கை

நாட்டின் மேல், தெற்கு சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் மேல் மாகாணங்களில் இன்றைய தினமும் அடைமழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடைக்கிடையே இந்த பகுதிகளில் 40 தொடக்கம் 45 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்று இரவு 9.30 மணி வரை அதிக மழை இரத்தினபுரியில் பெய்துள்ள நிலையில், அது 222.5 மில்லிமீற்றராக பதிவாகியுள்ளது.

201.1 மில்லி மீற்றர் மழை எஹெலியகொடவிலும் 153.8 மில்லி மீற்றர் மழை தெஹிஓவிட்டவிலும் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக குறித்த 3 பிரதேசங்களிலும் உள்ள வலய கல்வி பாடசலைகள் மூடப்பட்டுள்ளன.

மழை மேலும் அதிகரித்தால், நில்வள கங்கை, கிங் கங்கை களு கங்கை, களனி கங்கை மற்றும் வென்தர கங்கை உட்பட பல கங்கைகள் பெருக்கெடுக்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த கங்கைகளுக்கு அருகில் உள்ள மக்கள் மிகுந்த அவதானமாக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அனர்த்தங்கள், காற்று மற்றும் மின்னல் காரணமாக இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

5 மாவட்டங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மண் சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இரத்தினபுரி, களுத்துறை, காலி, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மலையகத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடைமழை காரணமாக லக்ஷபான நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் இரண்டும், தெதுரு ஓய மற்றும் உடவல நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் இரண்டும் திறக்கப்பட்டுள்ளன.

தற்போது நாட்டில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலை அடுத்து வரும் சில தினங்களுக்கு நீடிக்கும் என வளிமண்டவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

அடைமழை பெய்யும் பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க முப்படையினர் தயாராக உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.