நீர்த்தேக்கத்திற்குள் மூழ்கியது பிரதான வீதியொன்றின் பாரிய பகுதி! அபாய நிலையில் பல கட்டடங்கள்

Report Print Thirumal Thirumal in இயற்கை
477Shares

தாழிறங்கியிருந்த ஹட்டன் - பொகவந்தலாவை பிரதான வீதியின் நிவ்வெளிகம பகுதி முழுமையாக இன்று முற்பகல் 11.30 மணியளவில் காசல்ரீ நீர்த்தேக்கத்திற்குள் சரிந்து மூழ்கியுள்ளது.

பிரதேச மக்கள் ஏற்கெனவே வெளியேற்றப்பட்டிருந்ததால், உயிராபத்துகள் எவையும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை நான்கு வீடுகளும் காசல்ரீ நீர்த்தேக்கத்திற்குள் சரிந்து விழுந்துள்ளதுடன், மேலும் சில கட்டடங்களும் சேதமடைந்து அபாய நிலையில் காணப்படுகின்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

ஹட்டன் - பொகவந்தலாவை பிரதான வீதியில் கடந்த மூன்று தினங்களுக்கு முன் வெடிப்பு ஏற்பட்டிருந்த பகுதி 12 அடிவரை இன்று அதிகாலை முற்றாக தாழிறங்கியதால் நோர்வூட், நிவ்வெளிகம பகுதியை சேர்ந்த 6 குடும்பங்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டிருந்தன.

வெடிப்புற்றிருந்த ஹட்டன் - பொகவந்தலாவை பிரதான வீதியோரம் இன்று அதிகாலை முற்றாக தாழிறங்கிய நிலையில் தொடர்ந்தும் தாழிறக்கம் ஏற்பட்டு வருவதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் நிவ்வெளிகம பகுதி முழுமையாக காசல்ரீ நீர்தேக்கத்திற்குள் சரிந்து விழுந்துள்ளது.

இதனால் ஹட்டனிலிருந்து மஸ்கெலியா நோக்கி பயணிப்போர் காசல்ரீ, நோட்டன் ஊடாக மவுஸ்ஸாக்கலை சந்தியை அடைந்து அங்கிருந்து ஹட்டனை நோக்கி பயணிக்க முடியும் எனவும், பொகவந்தலாவையிலிருந்து ஹட்டன் நோக்கி பயணிக்கும் சாரதிகள் பொகவந்தலாவை - டின்சின் சந்தி ஊடாக டிக்கோயா நகருக்கு சென்று அங்கிருந்து ஹட்டன் நகரை நோக்கி செல்ல முடியும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.