எழுக தமிழ் எழுச்சிக்கு அறைகூவும் நீதிக்கான நடைப்பயணம்! 15வது நாளை எட்டியது

Report Print Dias Dias in ஏனைய நாடுகள்

ஈழத்தமிழ் மக்களின் நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான கோரிக்கைகளுடன், ஜெனீவா நோக்கி நகர்ந்து வரும் நீதிக்கான நடைப்பயணம், 'எழுகதமிழ்' எழுச்சிக்கு அறைகூவல் விடுத்துள்ளது.

எதிர்வரும் செப்டெம்பர் 16ம் நாள் யாழ்ப்பாணம் முற்றவெளியிலும், நியுயோர்க் ஐ.நா பொதுச்சபை முன்றலிலும் எழுக தமிழ் எழுச்சி நிகழ்வு இடம்பெறவிருக்கின்றது.

அதே நாளில் ஜெனீவாவில் இடம்பெற இருக்கின்ற நீதிக்கான கவனயீர்ப்பு போராட்டத்தில் நீதிக்கான நடைப்பயணம் சென்றடைய இருக்கின்றது.

பிரான்ஸ் பாராளுமன்ற முன்றலில் இருந்து தொடங்கிய இந்த நீதிக்கான நடைப்பயணத்தில் மூவர், தொடர்ச்சியாக நடந்து வரும் நிலையில், 15வது நாளில் ஐவர் நடந்து வருகின்றனர்.

லண்டனில் இருந்து ஒருவரும் இந்நடைப்பயணத்தில் தன்னை உணர்வெழுச்சியுடன் இணைத்துள்ளார். மொத்தமாக இந்நடைப்பயணம் 413 கிலோ மீற்றர்களை கடந்துள்ளது.

இதேவேளை, ஐரோப்பிய பாராளுமன்றம் அமைந்து ஸ்ரார்புக் நகரில் இருந்து நீதிக்கான மிதிவண்டி தொடர்ந்தும் ஜெனீவா நோக்கி சென்று கொண்டுள்ளது.

நீதிக்கான வேட்கையுடன் ஜெனீவா ஐ.நா மனித உரிமைச்சபை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நீதிக்கான இப்பயணங்கள், தனது வழி தடத்தில் உள்ள பல்வேறு சிறு,பெரு நகரங்களின் சபைகளைச் சந்தித்து தமது நீதிக்கான நடைப்பயணம் குறித்து எடுத்துரைத்து வருவதோடு, கோரிக்கை மனுக்களையும் கையளித்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.