வட்டக்கச்சி மத்திய கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்க கௌரவிப்பு நிகழ்வு

Report Print Dias Dias in ஏனைய நாடுகள்

கிளிநொச்சி மாவட்டத்தின் முன்னணிப் பாடசாலைகளில் ஒன்றான வட்டக்கச்சி மத்திய கல்லூரியின் வருடாந்த ஒன்று கூடலானது கடந்த ஒக்டோபர் 5ம் திகதி லண்டனில் உள்ள FEATHERSTONE High School மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

இந்நிகழ்வில் வட்டக்கச்சி மத்திய கல்லூரியின் மேனாள் கணித பாட ஆசிரியரும், கிளிநொச்சிக் கோட்ட கணிதபாட ஆசிரிய ஆலோசகரும், கிளிநொச்சி விஞ்ஞானக் கல்வி நிலைய நிறுவுனருமான எட்வேர்ட் மரியதாசன் பிரதம விருந்தினராகவும், முன்னாள் கிளிநொச்சி கோட்ட கல்வியதிகாரி தர்மரட்ணம் வட்டக்கச்சி மத்திய கல்லூரியின் முன்னாள் கணக்கியல் ஆசிரியர் லிங்கநாதன் ஆகியோரும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து சிறப்பித்துள்ளனர்.

இதன்போது ஐரோப்பா தழுவிய வட்டக்கச்சி மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களோடு, டென்மார்க் சொன்னென்பெர்க் நகரசபை உறுப்பினர் சண்முகம் கணேஸ்வரன், பிரித்தானியாவுக்கான இலங்கைத் தூதரக சிரேஸ்ட அதிகாரி அகஸ்டீன் கிறிஸ்டிறுபன் உட்பட பலரும் கலந்துகொண்டமை சிறப்பம்சமாகும்.

இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதம விருந்தினர் கடந்த காலங்களில் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் பல ஆசிரியர்களின் அர்பணிப்புடனான பணிகளை மீள நினைவுபடுத்தி அவையினரை நெகிழ வைத்துள்ளார்.

பல்வேறு கலை நிகழ்வுகளுடன் நடந்து முடிந்த ஒன்று கூடலானது தாயகத்திலும்,புலம்பெயர் தேசங்களிலும் சிதறி வாழும் வட்டக்கச்சி மத்திய கல்லூரி சமூகத்துக்கு ஒரு ஆரோக்கியமான உறவுப்பால புத்தெழுச்சிக்கு வலிமை சேர்க்கும் என நம்புவோமாக.