ரஷ்யாவில் எதிர்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி கைது செய்யப்பட்டமைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் சுமார் 2000 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ரஷ்ய அதிபர் புடின் மற்றும் அவரது அரசின் ஊழலையும் கடுமையாக விமர்சித்து வந்தவர் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி.
ரஷ்ய அதிபர் தேர்தலின்போதும், தொடர் பிரச்சாரங்களில் ஈடுபட்ட அலெக்ஸி நவால்னிக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.
ஆனால், புடின் அரசு அவர் மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்தி, தேர்தலில் போட்டியிட முடியாமல் செய்தது. இருப்பினும் அலெக்ஸி நவால்னி தொடர்ந்து பொது வெளியில் புடின் அரசை விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் டாம்ஸ்க் நகரிலிருந்து மாஸ்கோவுக்கு விமானத்தில் செல்லும்போது அலெக்ஸி திடீரென்று மயங்கி விழுந்தார்.
Момент задержания Любови Соболь pic.twitter.com/8Qr0xjhoDG
— Соболь Любовь (@SobolLubov) January 23, 2021
இதையடுத்து அவர் உடனடியாக ஜேர்மனிக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையின் போது,
அலெக்ஸி நவால்னிக்கு விஷம் வைக்கப்பட்டதை ஜேர்மனி அரசு உறுதிப்படுத்தியது. அவருக்கு விஷம் வைக்கப்பட்டது தொடர்பாக தங்களுக்கு ஆதாரம் கிடைத்துள்ளதாக ஜெர்மனி தெரிவித்திருந்தது.
சிகிச்சைக்கு பின் அலெக்ஸி நவால்னி நாடு திரும்பிய போது பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டார். ஏனெனில் அவரை உடனடியாக காவலில் எடுத்து விசாரணை செய்ய முடிவு செய்திருந்த நிலையில், அவர் பரோல் விதிமுறைகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தற்போது ரஷ்யாவில் அலெக்ஸி நவால்னியின் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம் நடைபெற்று வருகிறது.
ரஷ்யாவின் சைபீரியாவிலிருந்து மாஸ்கோ மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் வரை பேரணி நடத்தப்பட்டன. இந்த ஆர்ப்பட்டாங்களில் இளம் வயது மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை இருந்தனர்.
இந்த பேரணிக்கு பொலிஸார் அனுமதி தரவில்லை என்று கூறப்படுகிறது. அதை மீறி இந்த பேரணி நடைபெற்றுள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் புடின் போ, ரஷ்யா சிறை முகமாக மாற்றப்பட்டுள்ளது என்று கோஷமிட்டுள்ளனர்.
இதில் சுமார் 40,000க்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில், 2000க்கும் அதிகமானவர்களை ரஷ்ய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் அலெக்ஸியின் மனைவியும் ஒருவர் என்று அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், மத்திய மாஸ்கோவில் நடந்த பேரணியில் குறைந்தது 40,000 பேர் பேரணியில் இணைந்துள்ளனர். 2019 ஆம் ஆண்டில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் தலைநகரில் நடந்த மிகப்பெரிய போராட்டமாக இது பார்க்கப்படுகிறது.