சுவிஸில் மிகப் பிரமாண்டமாக நடக்கும் (ஓகஸ்ட் 13, 14) தமிழர் விளையாட்டு விழா

Report Print Thayalan Thayalan in ஏனைய விளையாட்டுக்கள்
88Shares

சுவிஸ் தமிழர் இல்லம் 15 ஆவது தடவையாக அனைத்துலக ரீதியில் மிகப் பிரமாண்டமாக தமிழீழக் கிண்ணத்துக்கான தமிழர் விளையாட்டு விழா 13, 14 - 08 - 2016 ஆம் திகதிகளில் (சனி, ஞாயிறு) நடைபெறவிருக்கின்றது.

சூரிச் மாநிலம் வின்ரத்தூரிலுள்ள Sportanlage Deutweg and Talgut மைதானத்தில் நடைபெறுகின்ற இந்த விளையாட்டு விழாவில், வழமை போல் இவ்வருடமும் ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், கனடா உள்ளிட்ட ஏனைய நாடுகளிலிருந்தும் ஏராளமான விளையாட்டு அணிகள் ஆர்வத்துடன் களமிறங்குகின்றன.

ஆண்கள், பெண்களுக்கான உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம், துடுப்பாட்டம், கிளித்தட்டு, முதலான குழு விளையாட்டுக்களும், இளையோருக்கான தடகளப் போட்டிகளும் இடம் பெறவிருக்கின்றன.

இவற்றுடன் கயிறு இழுத்தல், குறிபார்த்துச்சுடுதல், சங்கீதக்கதிரை என்பனவும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களான கண் கட்டி அடித்தல், தலையணை அடிச்சமர் போன்றனவும் வெகு சிறப்பாக நடைபெறவுள்ளன.

உதைப்பந்தாட்ட இறுதிப்போட்டி சனியன்று இரவு பிரதான மைதானத்தில் மின்னொளியில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பெறும் அணிகளுக்கு பெறுமதி வாய்ந்த வெற்றிக்கிண்ணங்கள், பதக்கங்கள் என்பவை வழங்கப்படவிருக்கின்றன.

புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் இளையோர்களை விளையாட்டு துறையில் மேம்பாடடையச் செய்வதோடு, அவர்கள் மத்தியில் தாயகம் குறித்த புரிதலை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டே தமிழர் விளையாட்டு விழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

வழமையை விட இவ்வருடம் மிக அதிக அணிகள் பங்கேற்க முன்வந்திருக்கின்றன. இது புலத்திலுள்ள தமிழ் இளையோர் மத்தியில் விளையாட்டுத் துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கியிருப்பதையே வெளிப்படுத்துகிறது.

இந்நிகழ்வுக்கு லங்காசிறி ஊடக அனுசரனை வழங்குகிறது. உங்களுடைய நிகழ்வுகளுக்கும் ஊடக அனுசரணை வேண்டும் என்றால் pr@lankasri.com மின்னஞ்சலை தொடர்பு கொள்ளவும்.

மேலதிக விபரங்கள் அறிய இங்கே அழுத்தவும்

Comments