கிளிநொச்சியில் தைத்திருநாளை முன்னிட்டு வீதியோட்டப் போட்டி

Report Print Arivakam in ஏனைய விளையாட்டுக்கள்
62Shares

தமிழர்களின் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு கிளிநொச்சி மாவட்ட இளைஞர் திறன் விருத்தி கழகம் ஏற்பாடு செய்திருந்த வீதியோட்டப் போட்டி இன்று(12) காலை 6.30 மணிக்கு கிளிநொச்சியில் சிறப்பாக ஆரம்பமானது.

இளைஞர் திறன் விருத்திக் கழகத்தின் தலைவர் சுரேன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஆண்களுக்கான வீதியோட்ட போட்டியை இயக்கச்சி சந்தியில் வைத்து கிளிநொச்சி பிராந்திய பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் சுதாகரனும் பெண்களுக்கான வீதியோட்ட போட்டியினை தட்டுவன்கொட்டி சந்தியில் வைத்து பச்சிலைப்பள்ளி உதவிப் பிரதேச செயலாளர் சதீஸ்கரனும் கொடியினை அசைத்து ஆரம்பித்து வைத்தனர்.

போட்டியில் நூற்றுக்கு மேற்பட்ட வீர வீராங்கனைகள் ஏ 9 வீதி ஊடாக முடிவிடமான கிளிநொச்சி கந்தசாமிகோவில் வரை சென்றடைந்தனர். அதனை தொடர்நது கந்தசாமி கோவில் வளாகத்தில் பரிசில்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

மேலும் இளைஞர் திறன் விருத்தி கழகத்தின் செயலாளர் புருசோத்தமன் தலைமையில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வில் கிளிநொச்சி பிராந்திய பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் சுதாகரன், பளை பிரதேச செயலாளர் ஜெயராணி பரமேதாயன், கரைச்சி பிரதேச செயலாளர் கோ. நாகேஸ்வரன், கிளிநொச்சி மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் ஜி.மோகனதாஸ், வணக்கத்திற்குரிய ஜெகதீஸ்வர குருக்கள் மற்றும் வணபிதா அருட்தந்தை ஜோர்ச் துரைரட்டணம் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரைகளையும் பரிசில்களையும் வழங்கி கௌரவித்தனர்.

இந்த வீதியோட்ட போட்டியில் ஆண்கள் பிரிவில் உருத்திரபுரத்தை சேர்ந்த இ.அனுயன், பா.விதுசன் ஆகியோர் 1 ஆம் 2 ஆம் இடத்தினையும் கிளிநொச்சி இரத்தினபுரத்தை சேர்ந்த தே.அன்ரனிடெல்மன் 3 ஆம் இடத்தினையும் பெண்கள் பிரிவில் 1 ஆம் இடத்தினை கிளிநொச்சி இரத்தினபுரத்தினை சேர்ந்த தே.டென்சிகாவும் 2 ஆம் இடத்தினை உதயநகர் மேற்கை சேர்ந்த ஜெ.சுருதிகாவும் 3 ஆம் இடத்தினை இரத்தினபுரத்தை சேர்ந்த வ.அனுகாவும் பெற்றுக் கொண்டனர்.

இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன், அரச அதிகாரிகள், விளையாட்டுத்துறை உத்தியோகத்தர்கள், சமுக அமைப்பின் பிரதிநிதிகள், விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் எனப் பலர் கலந்து சிறப்பித்தனர்.

Comments