சஞ்சயனின் அபார ஆட்டம் கைகொடுக்க வடக்கின் முதல்வனாய் முடிசூடியது யாழ் இந்துக் கல்லூரி!

Report Print Samaran Samaran in ஏனைய விளையாட்டுக்கள்

வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான கூடைப்பந்தாட்ட போட்டியில் 20 வயது ஆண்கள் பிரிவில் கொக்குவில் இந்துவை வீழ்த்தி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி கிண்ணம் வென்றுள்ளது.

யாழ் மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்கத்தின் பழைய பூங்கா கூடைப்பந்தாட்ட திடலில் இந்த போட்டிகள் இடம்பெற்றன.

20 வயது ஆண்கள் இறுதியாட்டத்தில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணியை எதிர்த்து கொக்குவில் இந்துக் கல்லூரி அணி மோதியது.

நான்கு கால்பாதிகளை கொண்டமைந்த இந்த ஆட்டத்தில், முதல் கால்பாதியில் இரண்டு அணிகளும் தலா 15 புள்ளிகளை பெற்றன.

இரண்டாவது கால் பாதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய யாழ் இந்து 16:12 என்ற புள்ளிகளின் அடிப்படையில் முன்னிலை பெற்றது.

முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் யாழ் இந்துக் கல்லூரி அணி 31 புள்ளிகளையும் கொக்குவில் இந்துக் கல்லூரி அணி 27 புள்ளிகளையும் பெற்றிருந்தன.

மூன்றாவது கால்பாதியில் 16:08 என்ற புள்ளிகளின் அடிப்படையில் கொக்குவில் இந்து முன்னிலை வகித்தது.

நான்காம் கால்பாதி அட்டத்தில் 16:10 என்ற புள்ளிகளை பெற்று யாழ் இந்து முன்னிலை வகித்தது.

இறுதியாக 55 : 53 என்ற புள்ளி கணக்கில் கொக்குவில் இந்து அணியை வீழ்த்தி கூடைப்பந்தாட்டத்தில் வடக்கின் முதல்வனாய் முடிசூடியது யாழ் இந்துக் கல்லூரி அணி.

இந்த இறுதிப் போட்டியில் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய யாழ் இந்துவின் முன்கள வீரர் நவநீதகிருஷ்னன் சஞ்சயன் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

முதல் தடவையாக நடைபெற்ற 17 வயதுப் பிரிவு ஆட்டத்திலும் இறுதிப்போட்டியில் யாழ் மத்திய கல்லூரி அணியை வீழ்த்தி யாழ் இந்துக்கல்லூரி அணி முதலாவது கிண்ணத்தை வென்றுள்ளது.

4 வருடங்களுக்கு பின் மீண்டும் வடக்கின் கூடைப்பந்தாட்ட முதல்வனாக முடிசூடியிருக்கும் யாழ் இந்து அணிகளுக்கு பயிற்சியாளராக T.கோசிகன் அவர்கள் பயிற்சிகளை வழங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.