தேசிய ரீதியிலான கூடைப்பந்தாட்ட தொடரில் யாழ். வேம்படி மகளிர் கல்லூரி சம்பியன்!

Report Print Samaran Samaran in ஏனைய விளையாட்டுக்கள்

15 வயதின் கீழ்ப்பட்ட பிரிவு “C” மகளிர் பாடசாலைகளுக்கு இடையிலான இந்தப் பருவகாலத்திற்கான நாடளாவிய கூடைப்பந்து தொடரின் இறுதிப் போட்டியும், மூன்றாம் இடத்திற்கான போட்டியும் நேற்று புனித அந்தோனியார் கல்லூரியின் மகளிர் கூடைப் பந்தாட்ட அரங்கில் இடம்பெற்றிருந்தது.

இறுதிப் போட்டி

யாழ்ப்பாணம் வேம்படி உயர்தர மகளிர் பாடசாலை அணியும், கண்டி புனித அந்தோனியர் மகளிர் கல்லூரி அணியும் மோதியிருந்த இந்த இறுதிப் போட்டியில், யாழ்ப்பாண வீராங்கனைகள் 66-37 என்ற புள்ளிகள் கணக்கில் மைதான சொந்தக்காரர்களான அந்தோனியார் மகளிர் கல்லூரி அணியை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றனர்.

ஆட்டத்தின் ஆரம்பத்தில் இரண்டு பாடசாலைகளும், அதிரடியாக ஆடிய போதிலும் பின்னர் தொடர்ந்த நிமிடங்களில் பந்து பரிமாற்றத்தில் சில தவறுகளை அந்தோனியார் மகளிர் அணி மேற்கொண்டது.

இப்படியாக, எதிரணி விட்ட சில தவறுகளால் ஆட்டத்தின் முதல் பாதி ஏழு புள்ளிகள் வித்தியாசத்தில் யாழ்ப்பாண வீராங்கனைகளுக்கு சொந்தமாகியது.

முதல் பாதி: வேம்படி உயர்தர மகளிர் பாடசாலை 31 – 27 புனித அந்தோனியார் கல்லூரி

ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் முன்னைய பாதியில் விட்ட தமது தவறுகளை திருத்த வேண்டிய அந்தோனியார் கல்லூரி அணி அதனை செய்திருக்கவில்லை.

மறுமுனையில் நேரம் செல்லச் செல்ல வேம்படி மகளிர் அணியும் தமது புள்ளிகளை அதிகரித்துக் கொண்டது.

இதன்படி, மிகவும் வசதியான முறையில் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை சம்பியன் பட்டத்தை தனதாக்கிக் கொண்டது.

முழு நேரம்: வேம்படி உயர்தர மகளிர் பாடசாலை 66 – 37 புனித அந்தோனியார் கல்லூரி

மூன்றாம் இடத்திற்கான போட்டி

மூன்றாம் இடத்திற்கான போட்டியில் CIS கண்டி அணியும் யசோதரா தேவி மகளிர் கல்லூரியும் பலப்பரீட்சை நடத்தியிருந்தன.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த இந்த ஆட்டத்தில் வெறும் ஒரு புள்ளி வித்தியாசத்தில் 44-43 என CIS கண்டி அணி யசோதரா தேவி மகளிர் கல்லூரியை வீழ்த்தி தொடரில் மூன்றாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது.