உலக வாழ் மக்களுக்காய் London Barnetஇல் கதிர்காமக் கந்தனின் ஆலயம்

கதிர்காம திருத்தலத்தில் பல ஆண்டுகளாக திரைமறைவில் இருந்து கந்தப் பெருமான் அருள்பாலித்தார். அவரது திருமுகத்தை திரையில் காண பல்லாயிரம் பக்தர்கள் திரண்டனர்.

அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த கந்தனின் விக்கிரகம் ஆண்டவன் கருணையால் சத்குரு ஸ்ரீ சரவணபாபாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வரலாற்று நிகழ்வு 2013 இல் நடைபெற்றது.

எப்போதும் ஒரு சத்குருவிடம் அது கையளிக்கப்பட்டது அன்றே ஈழநாட்டில் அமைதி திரும்பத் தொடங்கியது. பக்தர்கள் கந்தனைத் தேடி கதிர்காமம் போகின்றார்கள் அங்கே போகாதவர்களையும் போகமுடியாதவர்களையும் காண கந்தனே சத்குருவின் கைகளில் அமர்ந்து உலக வலம் வந்து இன்று London Barnet என்ற இடத்தில் தனக்கென ஒரு தலத்தை தேடி அமர்ந்திருக்கிறார்.

இது லண்டன் வாழ் மக்களுக்கு மட்டுமல்ல அனைத்து உலக மக்களுக்கும் கிடைத்த மாபெரும் பாக்கியம் ஆகும். இது இந்துக்களுக்கு மட்டும் உரிய புனித தலம் அல்ல. இது சர்வ மத ஒருமைப்பாட்டை எடுத்துக்காட்டும் ஒரு மத்திய தலமாக உயர்ந்துள்ளது.

இந்து மத தெய்வங்களுடன் பௌத்த கிறிஸ்தவ புனிதர்களும் விருட்சங்களின் நிழலில் அமர்ந்து சாந்தம், அமைதி, ஒற்றுமை ஆகிய வாழ்க்கை நெறிமுறைகளை வெளிப்படுத்தி நிற்கின்றனர்.

ஆலயங்கள் பெரும்பாலும் ஒருவரால் அல்லது ஒரு குழுவினரால் உருவானவையே. ஒவ்வொரு ஆலயத்துக்கும் ஒரு வரலாறு இருக்கின்றது. ஸ்தலம், காலம் என்பவை ஒன்றுகூடும் வேலை எடுக்கும் முயற்சி திருவினையாக்கும். இதற்கு பல ஆண்டுகள் கூட காத்திருக்க வேண்டியிருக்கும். ஆகும் நாள் என்று ஒன்று உள்ளது. அந்த பிரதிஷ்டா நாளை எதிர்பார்த்து இருந்தோம். அது 2020 ஜனவரி 26 என்பதை இன்று உலகம் அறிந்துள்ளது. அபிஷேகம், ஆராதனை, பூஜை மந்திர உச்சாடனம் ஆகிய அனைத்தும் இந்துமத வித்தகர்களால் பரிபூரணமாக நிறைவேற்றப்பட்டன.

கும்பாபிஷேகத்தின் முதல் நிகழ்வாக ஆச்சார்ய வர்ணம் எனும் ஆச்சாரியர்களை கௌரவித்தல் இடம்பெற்றது. இந்த அபிஷேகத்தை நிறைவேற்ற வைக்கும் பணி ஆச்சார்யர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அடுத்து ஆலயம் அமைந்திருக்கும் பூமியை புனிதமாக்கி பூமாதேவியின் ஆசி வேண்டி பூமி பூஜா செய்யப்பட்டது.

அன்று பிரத்யட்சமாக கோமாதா பூஜையும் இடம்பெற்றது. பசுவும் கன்றும் மண்டபத்தில் கொண்டுவரப்பட்டு ஆராதிக்கப்பட்டன. இந்த நிகழ்வு பலருக்கு புதிய அனுபவமாகவும் கண்கொள்ளாக்காட்சியாகவும் இருந்தது.

தினசரி நிகழ்வுகள் மஹா கணபதி ஹோமத்துடன் ஆரம்பமாகின. விக்ரகங்களை ஜலத்திலிருத்தி குளிர வைக்கும் ஜலாதிவாசம் சடங்கு நடைபெற்றது. எல்லா உயிர்களும் நீரில் இருந்து உருவானவை. இந்த சடங்கு அந்த தத்துவத்தின் வெளிப்பாடாக இருந்தது.

தனதான்ய பீடத்தில் அமர்த்தி பூசைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து விக்கிரகங்களுக்கு எண்ணெய் சாத்தும் பாக்கியம் அனைவருக்கும் கிடைத்தது.

2020 ஜனவரி 26ஆம் திகதி காலை 11 மணி 11 நிமிடத்தில் ஸ்ரீ கதிர்காம யோகி யோகீஸ்வர யோக தண்டாயுதபாணி மூல மூர்த்தியாக பிரதிஷ்டை செய்யப்பட்டார்.

தீப அலங்காரத்துடன் மணியும் சங்கும் பேரொலி எழுப்ப குருமாருடன் சற்குருவும் ஆராதனை செய்யும் காட்சியை காண இரு விழிகள் போதாது.

தேவலோகம் தெரிந்தது. உடல் புல்லரித்தது. எந்த ஆலயத்திலும் காண முடியாத ஒரு விசேட அம்சம் என்னவெனில் முருகப் பெருமானின் கர்ப்பக்கிரகத்தை நவக்கிரங்கள் அருவமாக சுற்றிவரும் படி பிரதிஷ்டை செய்யப்பட்டமையாகும்.

மூலவரின் வலது புறம் ஸ்ரீ மகா கணபதியும் சீரடிமகான் சாய்பாபாவும் அமர்ந்திருக்க இடது புற ஸ்ரீ பிரகதீஸ்வரராக சிவலிங்கமும் நந்தியும் இருக்க ஸ்ரீ புவவேனஸ்வரியாக அம்பாளும் அமர்ந்திருக்கின்றனர். விக்கிரகங்களுக்கு தனித்தனியே பூஜை ஆராதனைகளும், ஹோமங்களும் அபிஷேகங்களும் நடைபெற்றன. விஷேட கலசாபிஷேகம் பல நூறு அடியவர்கள் முன்னிலையில் பக்தி பரவசமாக நடைபெற்றது.

இவ் ஆலயத்தின் மற்றுமொரு சிறப்பு பகவான் ஸ்ரீ சத்தியசாய் பாபாவால் பல வருடங்களுக்கு முன் ஒரு அன்பருக்கு கையளிக்கப்பட்ட அவரது திரு உருவப்படம் ஒரு புறம் நிறுத்தப்பட்டுள்ளது.

அதன் அருகே கதிர்காம திருத்தலத்தில் பல ஆண்டுகளாக பூஜை செய்யப்பட்ட வள்ளி தெய்வானையுடன் மயிலேறி அமர்ந்திருக்கும் முருகப்பெருமானின் அழகிய திரைச் சேலையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கதிர்காம கந்தன் கண்முன்னே நிறுத்திய உணர்வு ஏற்படுகின்றது. இதுவும் ஒரு அன்பரின் முயற்சியால் எமக்கு கிடைத்தது.

தினமும் அஸ்டோத்திர பாராயணங்களும் சற்குருவின் சத்சங்கங்கள் நடைபெற்றன. நவக்கிரங்களை பிரதிஷ்டை செய்வதற்கு தனித் தனியாக ஒவ்வொரு கிரகங்களுக்கும் அஸ்டோத்திரம் ஓதப்பட்டது. சுப்ரமணிய அஸ்டோத்திரம் உலக அமைதிக்காகவும் உடல் ஆரோக்கியத்துக்காகவும் பல முறை பலநூறு மக்களால் ஓதப்பட்டது.

உள்ளத்தை உருக்கும் பஜனைகளும் வேத காண ஸாரங்களும் பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தின.

ஆலயத்தின் சுற்றுப்புரம் சோலையாக காட்சித்தருகின்றது. ஆலயத்தின் முன்புறம் பிரயோக சித்தி கணபதி அமர்ந்துள்ளார். இஸ்ட சித்திகளை வழங்க வல்ல வரசித்தி கணபதியை 3 முறை வலம் வந்து வழிப்பட்டால் எமது சங்கடங்கள் தீரும்.

எமக்கும் சித்தியும் புத்தியும் கிட்ட யோகசித்தி கணபதி வழிபாடும் அமைவானது. ஸ்ரீ தட்சணாமூர்த்தி இயற்கை எழிலில் ஒரு பெரு விருட்டத்தின் அடியில் தெய்வீக புன்னகையுடன் அருள்பாலித்த வண்ணம் அமர்ந்துள்ளார். கொட்டும் மழையிலும் பக்தர்கள் ஸ்ரீ தட்சணாமூர்த்தியை சுற்றி நிற்க பிரதிஷ்டை நடந்தேறியது. மழையால் இயற்கையை மகிழ்வித்து தானும் மரத்தடியில் மகிழ்வோடு அமர்ந்தார்.

இன்னும் ஒரு விருட்சத்தின் நிழலில் நாகராஜாவும், நாகராணியும் அமர்ந்தனர். இந்த மரத்தின் கிளைகள் இயல்பாக முன்புறம் சரிந்து நாக தேவதைகளுக்கு குடையாக காட்சி தந்தன. குருதி சம்பந்தமான நோய்கள் உட்பட சகல தீரா நோய்கள் எனப்பட்டவையும் குணமாக நாக வழிபாடு அவசியம் என உணர்த்தப்பட்டது.

அத்துடன் வாழ்க்கையில் ஏற்படும் தடைகளையும் அகற்ற நாக வழிபாடு துணை செய்யும். நயினை நாகபூசணி அம்மனின் அருளாசி நிறைவாக கிடைத்ததன் பலனால் பிரதிஷ்டை ஆத்மார்த்தமாக நடைபெற்றது.

பால், மஞ்சள் போன்ற திரவியங்களால் அபிஷேகமும் நடைபெற்றது. புத்த பகவான் நிஷ்டையில் அமர்ந்திருக்க அவர் முன்னே இயேசுநாதரும், மேரி மாதாவும் சாந்த சொரூபமாக அருள்பாலித்து நிற்கின்றனர்.

இதனால் இத்தலம் சர்வ மதஸ்காரம் சங்கமிக்கின்ற புண்ணிய பூமியாக அமைந்துள்ளது. இன, மத பேதமின்றி எல்லா ஜுவராசிகளும் ஆரோக்கியத்துடன் அமைதியான உலகத்தில் வாழ வேண்டும் என பிரார்த்திக்கும் ஒரு புண்ணிய சேத்திரமாக இவ்விடம் அமைந்துள்ளது.

குருவருளாலும், திருவருளாலும் மன நிறைவுக்கும் மன அமைதிக்குமான ஒரு மன சாந்தி நிவயம் காலத்தின் தேவையை உணர்ந்து உருவாகியிருக்கின்றது. ஒரு சற்குருவின் சங்கல்ப்பத்தில் அவரது வழிகாட்டுதலில் ஆரம்பிக்கப்பட்ட இவ் அறப்பணியை ஒரு ஆண்மீகப் பணியாக பக்தர்கள் முன்னெடுத்துச் செல்வார்கள்.

சற்குருவின் வழி நடத்தலின்படி உலக அமைதிக்கான பிரார்த்தனைகள், தானங்கள் போன்ற பல நற்பணிகள் நடைபெற ஆரம்பித்துள்ளன.

முன்னோடி நிகழ்வாக பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு அனுபவமுள்ள ஆசான்களால் அறிவுறை வழங்கப்பட்டதுடன் காயத்திரி மந்திரம் பற்றிய ஒரு அழகிய மலரும், எழுத்தும் உபகரணங்களும் வழங்கப்பட்டன.

வித்தியாதானம் உட்பட்ட அன்னதானம், சிரமதானம் போன்றனவும் இயற்கையை பாதுகாக்கும் நற் பணிகளும் நடைபெறும். சற்குரு எம் மனங்களில் இருக்கும் வரை அவர் அமைத்துத் தந்த புண்ணியதலம் எம்முடன் இருக்கும் வரை நாம் மன அமைதியுடன் வாழ்வோம்.

நாம் புண்ணியம் செய்தவர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. சுவாமியிடம் சரணடைந்து அவரது தரிசனம் கிடைத்தாலே நம் வாழ்வு மட்டுமல்ல எங்கள் சந்ததியே தழைக்கும்.

சரணாகதம் எமக்கு ஒளிமயமான வாழ்வை தரும்.

அற்புதங்கள் தொடரும்...

பக்தியுடன்,

சு.சண்முகராசா (கனடா)

இளைப்பாறிய புவியியல் ஆசான் - யாழ். இந்துக்கல்லூரி.

சிரேஷ்ட விரிவுரையாளர்,தொலைக்கல்வி ஆசிரியர் பயிற்சி நெறி - யாழ்ப்பாணம்